இறுதி யுத்தத்தின்போது உயிரிழந்த உறவுகளை நினைவு கூரும் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வு இன்று வடக்கில் பல இடங்களிலும் அனுஷ்டிக்கப்படவுள்ளது. உறவுகளை நினைவுகூர்ந்து விசேட பிரார்த்தனை வைபவங்கள் இடம்பெறவுள்ளன.

முள்ளிவாய்க்கால் பகுதியில் காலை 9 மணி முதல் 10 மணி வரை உயிரிழந்த உறவுகளை நினைவுகூர்ந்து விசேட பிரார்த்தனை, மலரஞ்சலி, தீபமேற்றல் போன்ற நிகழ்வுகள் இடம்பெறவுள்ளது. இதற்கான ஏற்பாட்டினை வடமாகாண சபை மேற்கொண்டுள்ளது. இந்த நிகழ்வில் வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் உட்பட தமிழ் அரசியல் கட்சிகளின் தலைவர்கள் மற்றும் பிரதிநிதிகள் பங்கேற்கவுள்ளனர். பொதுமக்களையும் இந்நிகழ்வில் பங்கேற்குமாறு அழைப்பு விடுக்கப்பட்டிருக்கின்றது.

முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் தினத்தை முன்னிட்டு இன்றைய தினம் அஞ்சலி நிகழ்வுகளையும் பிரார்த்தனை வைபவங்களையும் நடத்துமாறு அரசியல் கட்சிகள் மற்றும் பொது அமைப்புக்கள் அழைப்பு விடுத்துள்ளன.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி, சிவில் சமூக அமையம், யாழ்.பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் என்பன நினைவேந்தல் நிகழ்வுகளை நடத்துமாறு அழைப்பு விடுத்திருக்கின்றன.

வடமாகாண முதலமைச்சர் தலைமையில்

முள்ளிவாய்க்காலில் அஞ்சலி நிகழ்வு

இறுதி யுத்தத்தில் உயிரிழந்த உறவுகளை நினைவுகூர்ந்து முள்ளிவாய்க்கால் கிழக்கு பாடசாலைக்கு அருகில் நினைவேந்தல் நிகழ்வு இன்று இடம்பெறவுள்ளது. இந்த நாள் எமது தமிழ் மக்கள் இரத்த சரித்திரம் எழுதிய துக்க தினம். வரலாறு உள்ளவரை இதனை நாம் அனுஷ்டிக்க வேண்டும். சர்வதேச யுத்த விதிகளை புறந்தள்ளிவிட்டு கொத்துக் கொத்தாக எமது உறவுகளை கொன்றொழித்த இறுதி நாளாகிய இன்று அனைவரையும் அஞ்சலி நிகழ்வில் கலந்துகொள்ளும்படி வடமாகாண சபை அழைப்பு விடுத்துள்ளது.

வடமாகாண சபையினால் முதலமைச்சர் தலைமையில் குழுவொன்று நியமிக்கப்பட்டு அக்குழுவினர் முள்ளிவாய்க்காலில் நினைவஞ்சலி நிகழ்வினை நடத்துவதற்கான ஏற்பாடுகளை செய்துள்ளனர். அந்த வகையில் வடமாகாணத்திலுள்ள அனைத்து மாவட்டங்களிலுமுள்ள மத வழிபாட்டுத் தலங்களில் காலை 6 மணி முதல் 9 மணிவரையும் யுத்த காலத்தில் படுகொலை செய்யப்பட்டவர்களின் ஆத்மா சாந்தி வேண்டி பிரார்த்தனைகளில் ஈடுபடுமாறும் காலை 9 மணி தொடக்கம் 10 மணிவரை முள்ளிவாய்க்கால் கிழக்கு பாடசாலைக்கு அருகில் நடைபெறவுள்ள பிரார்த்தனை, மலரஞ்சலி செலுத்துதல், தீபமேற்றுதல் நிகழ்வுகளிலும் கலந்துகொள்ளும்படியும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

இந்த நிகழ்வில் கலந்துகொள்ளும் மக்களின் வசதி கருதி முல்லைத்தீவு பேருந்து நிலையத்திலிருந்து முள்ளிவாய்க்கால் வரை பேருந்து வசதிகளும் ஒழுங்கு செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

யாழ்.பல்கலை வளாகத்தில்

நினைவேந்தல் நிகழ்வு

இதேவேளை யாழ்.பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் இன்று காலை பல்கலைக்கழக முன்றலில் அஞ்சலி நிகழ்வு இடம்பெறவுள்ளது. தமிழ்பேசும் ஒரே குற்றத்திற்காக வயது பேதமின்றி கருவுற்ற குழந்தை முதல் கட்டிலில் கிடந்த முதியோர் வரை ஈவிரக்கமின்றி பேரினவாதத்தினால் படுகொலை செய்யப்பட்ட அனைவருக்காகவும் உணர்வுபூர்வமாக அஞ்சலி செய்வோம் என யாழ்.பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் அழைப்பு விடுத்துள்ளது.

அந்த வகையில் முற்பகல் 10 மணிக்கு பல்கலைக்கழக முன்றலில்அஞ்சலி நிகழ்வு நடைபெறவுள்ளது.

இன்றைய நாளை கறுப்பு

நாளாக அனுஷ்டிக்கவும்

இறுதி யுத்தத்தில் உயிரிழந்த உறவுகளை நினைவுகூரும் இன்றைய தினத்தை கறுப்பு நாளாக அனுஷ்டிக்குமாறு தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி கோரியுள்ளது. இனவழிப்பு நடைபெற்ற இன்றைய நாளில் மங்கள கரமான நிகழ்வுகளையும் கேளிக்கை நிகழ்வுகளையும் தவிர்த்து கறுப்பு நாளாக கடைப்பிடிக்கும் படி அந்த முன்னணி வலியுறுத்தியுள்ளது.

போர்க் காலத்தில் தமிழ் மக்கள் மீது விதிக்கப்பட்டிருந்த பொருளாதாரத் தடை காரணமாக பெருமளவான மக்கள் பட்டினிச் சாவுக்கு முகம் கொடுக்கவேண்டி ஏற்பட்டது. எமது இரத்த உறவுகள் சந்தித்த அந்த துயரத்தை நினைவு கூரும் வகையில் இன்றைய தினம் அறுசுவையற்ற கஞ்சியினை ஒருவேளை உணவாக அருந்துமாறும் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

முள்ளிவாய்க்கால் கிழக்கில் பி.ப 3.30 மணிக்கு புனித சின்னப்பர் ஆலய சொரூபத்திற்கு முன்னால் நினைவேந்தல் நிகழ்வினை நடத்துவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதேபோல் மட்டக்களப்பு வாகரையில் மாணிக்கபுரம் ஆற்றங்கரையிலும் காலை 10 மணிக்கு அஞ்சலி நிகழ்வு இடம்பெறவுள்ளது. இந்த நிகழ்வுகளில் பங்கேற்குமாறும் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி அழைத்துள்ளது.

பிரார்த்தனையில் ஈடுபட

வணிகர்சங்கங்கள் அழைப்பு

எமக்காக உயிர் நீத்த அனைத்து தமிழ் உறவுகளை நினைவு கூரும் முகமாகவும் அவர்களது ஆத்மா சாந்திக்காகவும் முள்ளிவாய்க்காலில் இன்று மே 18 ஆம் நாள் நடைபெறும் நினைவேந்தல் நிகழ்வில் நாம் ஒவ்வொருவரும் பங்குபற்றி பிரார்த்தனையிலும் ஈடுபடவேண்டும் என யாழ்.வணிகர் கழகமும் அழைப்பு வ விடுத்திருக்கிறது.

தமிழ் மக்களின் வரலாற்றில் இது ஒரு முக்கியமான நாளாகும். தங்கள் இன்னுயிரை துறந்த அனைத்து எம் உறவுகளை நாம் வணங்கவேண்டிய நாளாகும். எனவே இப் புனித கடமையை நிறைவேற்ற இயலுமானவரை உங்கள் வர்த்தக ஸ்தாபனம் சார்பாக குறைந்தது ஒருவராவது இந்நிழ்வில் பங்குபற்றி பிரார்த்தனையிலும் ஈடுபடுமாறும் அந்தச் சங்கம் கோரியுள்ளது.

விடுதலைக்காக உயிர் நீத்தோரை நினைவு கூர

தமிழ்த் தேசிய கூட்டமைப்பு அழைப்பு

தமிழின விடுதலைக்காக உயிர்நீத்த அனைவரையும் மே 18 இல் நினைவு கூர்ந்து அவர்களின் ஆன்ம ஈடேற்றத்திற்கு பிரார்த்தனையில் ஈடுபடுமாற தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அழைப்பு விடுத்துள்ளது.

நாம் எந்த பேதமின்றி உயிரிழந்த உறவுகளை ஒற்றுமையாக ஒருபொது இடத்தில் நினைவுத்தூபி நிறுவி நினைவு கூரவேண்டும். இன்று ஒன்று கூடிப்பிரார்த்திக்க முள்ளிவாய்க்கால் பொருத்தமான இடமாகும். எனவே அனைவரும் விடுதலை என்ற இலக்கை அடைவதற்கும் இழந்த உயிர்களுக்கு ஆத்மா சாந்தி பெறவும் ஒன்றுகூடுமாறு அழைக்கிறோம் என்று கூட்டமைப்பின் செயலாளர் மாவை சேனாதிராசா அழைப்பு விடுத்துள்ளார்.

மாலை 4 மணிக்கு ஒன்று கூடுமாறு

தமிழரசுக் கட்சி அழைப்பு

இதேவேளை தமிழரசுக் கட்சியினரால் நடத்தப்படும் அஞ்சலி நிகழ்வு பாராளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா தலையைில் இன்று மாலை 4.30 மணிக்கு மார்ட்டின் வீதியில் அமைந்துள்ள அலுவலகத்தில் நடைபெறவுள்ளது. இவ் அஞ்சலி நிகழ்வில் கலந்துகொண்டு இறந்த உயிர்களுக்கு ஆத்மா சாந்திபெற பிரார்த்திக்கும்படி தமிழரசுக் கட்சியினர் அழைப்பு விடுத்துள்ளனர்.

மேலும் வவுனியா பிரஜைகள் குழு, முல்லைத்தீவு மாவட்ட பிரஜைகள் உரிமைக்கான அமையம், காணாமல் ஆக்கப்பட்டோருக்கான சங்கங்கள் ஆகியவற்றின் நினைவேந்தல் நிகழ்வு காலை 10.30 மணிக்கு முள்ளிவாய்க்காலில் நடைபெறும். அத்துடன் மன்னார் பொது அமைப்புக்கள் ஒன்றியத்தின் அஞ்சலி நிகழ்வு மன்னார் நகர மண்டபத்தில் காலை 10 மணிக்கு இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.