இந்தியா - கேரளாவில் பெற்ற தாயை வீட்டுக்குள் பூட்டி வைத்து அவர் உடலில் புண்கள் ஏற்பட்டு அவை அழுகி கடும் வலியை ஏற்படுத்தும் நிலைக்கு தள்ளிய மகனின் செயல், அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.

திருவனந்தபுரம் அருகே உள்ள இரசல்புரம் பகுதியை சேர்ந்தவர் லலிதா என்பவருக்கு வயது 75. இவருக்கு ஜெயக்குமார் என்ற 45 வயதுடைய மகன் உட்பட 4 பிள்ளைகள் உள்ளனர். இதில், மற்ற 3 பேரும் திருமணமாகி தனித்தனியாக வசித்து வரும் நிலையில் ஜெயக்குமார் தாயுடன் வசித்து வந்தார்.

இந்நிலையில், லலிதாவிற்கு சொந்தமாக 30 ஏக்கர் நிலமும், வீடும், வங்கியில் 15 லட்சம் பணமும் இருந்துள்ளது. அத்தோடு, ஜெயக்குமார் தாயை மிரட்டி இவற்றை தனது பெயருக்கு எழுதியும் வாங்கியுள்ளார். 

இதன்காரணமாக, அவரது மற்றைய சகோதரர்களுக்கு தெரியாமல் இருக்க அவர்கள் யாரையும் வீட்டுக்குள் அனுமதிப்பதில்லை. இந்நிலையில் கடந்த சில மாதங்களாக ஜெயக்குமார் தாய்க்கு சரியாக உணவு கொடுக்காமலும், பராமரிக்காமலும் அவரை வீட்டில் பூட்டி வைத்துள்ளார்.

மேலும் தாய் நலமாக இருப்பதாக ஏமாற்ற அவரை வலுக்கட்டாயமாக நடக்க வைத்து வீடியோ எடுத்து சகோதரர்களுக்கு அனுப்பியுள்ளார். இதனால் லலிதாவின் உடல்நிலை நாளுக்கு நாள் மிகவும் மோசமானது. மேலும் உடலில் புண்கள் ஏற்பட்டு அவை அழுகி கடும் வலியை ஏற்படுத்தியது. இதனால் வலி பொறுக்க முடியாமல் லலிதா அலறியுள்ளார்.

அவரது அலறல் சத்தம் கேட்டு அப்பகுதியினர் விரைந்து வந்து ஜெயக்குமார் வீட்டு கதவை தட்டியும் அவர் திறக்கவில்லை. பின்னர் பொலிசாருக்கு தகவல் தரப்பட்டதால் அவர்கள் அங்கு வந்து சுவர் ஏறி குதித்து வீட்டின் கதவை உடைத்து உள்ளே சென்றனர்.

அப்போது லலிதா உடலில் புழுக்கள் அரித்து ஆபத்தான நிலையில் உயிருக்கு போராடிக்கொண்டிருந்தார்.

இந்நிலையில், குறித்த தாயை மீட்டு தனியார் வைத்தியசாலையில் சேர்த்த பொலிசார் ஜெயக்குமாரை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

பெற்றத் தாயைக்கே இப்படியொரு நிலைமையா என ஊர்மக்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.