பொது நிர்வாக அமைச்சினால் ஒரு தரப்பினருக்கு மாத்திரம் கொடுப்பனவுகளை அதிகரிப்பதற்காக சமர்ப்பிக்கப்பட்டுள்ள அமைச்சரவை பத்திரத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து திங்கட்கிழமை  (23) காலை முதல் சுகயீன விடுமுறை தொழிற்சங்க பணிப்பகிஸ்கரிப்பை முன்னெடுக்கப்படுகிறது.

நாடு பூராவும் சுகயீன விடுமுறை   பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபட்டுள்ள நிலையில் அம்பாறை மாவட்டத்தில் உள்ள   அனைத்து அரச நிறுவனங்களிலும் கடமையாற்றுகின்ற  கிராம உத்தியோகத்தர்கள்  அபிவிருத்தி அதிகாரிகள் அரச முகாமைத்துவ உதவியாளர்கள் உள்ளிட்ட   தொழிற்சங்கங்களின் உறுப்பினர்கள் சிலர்  தமது கோரிக்கைகளுக்கான  ஆதரவினை   தெரிவித்துள்ளனர்.  

குறிப்பாக கல்முனை பிரதேச செயலகம், கல்முனை வடக்கு தமிழ் பிரதேச செயலகம், நாவிதன்வெளி பிரதேச செயலகம் போன்ற பிரதேச செயலகங்களில்  உள்ளவர்களும்   பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபட்டு தமது ஆதரவை தெரிவித்து  வருகின்றனர் .இதனால் பொதுமக்கள் தமது கடமைகளை நிறைவேற்றிக்கொள்வதில் பெரும் அசெளகரியத்திற்கு உள்ளாக்கப்பட்டனர்.

வேதனம் மற்றும் கொடுப்பனவு பிரச்சினைகளை முன்வைத்து  குறித்த சுகயீன விடுமுறை தொழிற்சங்க போராட்டத்தில் ஈடுபட்டுள்ள இப்போராட்டத்தில்  கிராம உத்தியோகத்தர்கள்  அபிவிருத்தி அதிகாரிகள் அரச முகாமைத்துவ உதவியாளர்கள் உள்ளிட்ட   தொழிற்சங்கங்களின் உறுப்பினர்கள் சிலரே   ஆதரவு வழங்கி இப்போராட்டத்தில் இணைந்துள்ளனர்.

மேலும் இப்போராட்டத்தில்   பொது நிர்வாக அமைச்சின் நிர்வாக அதிகாரிகளுக்கு மாத்திரம் கொடுப்பனவுகளை பெற்றுக் கொடுக்க நடவடிக்கை எடுத்துள்ளதன் ஊடாக அனைத்து அரச சேவையிலும் கடுமையான வேதன முரண்பாடு ஏற்படக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதி தேர்த்தலுக்கான திகதி அறிவிக்கப்பட்ட நிலையில் தொடர்ச்சியாக தொழிற்சங்க ஊழியர்களின் பணிப்பகிஷ்கரிப்பு இவேலைநிறுத்தப்போரட்டம், சத்தியாகிரக போரட்டங்கள் என்பன நாட்டில் சமகாலத்தில்  நடைபெற்றுவருகின்றமை குறிப்பிடத்தக்கது. 

மேலும் இன்றைய  பணிப்பகிஷ்கரிப்பு போராட்டத்தில் இணைந்துள்ள  உத்தியோகத்தர்களது  விபர அறிக்கைகளை பொலிசார் திரட்டி வந்தமை குறிப்பிடத்தக்கது.