சஜித்தை சந்திப்பதற்கான கோரிக்கைகள் இருக்கின்றது எனினும் சந்திப்பதற்கான வாய்ப்பு ஏற்படவில்லை என பாராளுமன்ற உறுப்பினர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்தார். 

வவுனியா தரணிகுளத்தில் இடம்பெற்ற மரம் நடுகை விழாவில் கலந்துகொண்டதன்  பின் ஊடகவியலாளரின்  கேள்விக்கு பதில் அளிக்கும் போதே இவ்வாறு தெரிவித்தார். 

நிறைவேற்று ஜனாதிபதி முறைமை தொடர்பான  பிரச்சினை தற்போது நிலவி வருகின்றது, குறிப்பாக அமைச்சரவையும் அதற்காக  அங்கீகாரம் கொடுக்காமலேயே முடிவுக்கு வந்த நிலை காணப்படுகின்றது. 

இது மஹிந்த ராஜபக்ஷ மற்றும் ரணில் விக்ரமசிங்க   அவர்களின் விருப்பத்தின் பெயரில் இடம் பெறுவதாக நீங்கள் நினைக்கின்றீர்களா? என ஊடகவியலாளர் கேட்டபோது,

அப்படி அல்ல , இது தோல்வியை  எதிர்கொள்கின்றவர்களுடைய ஒரு பொய்யுரையாகத்தான் இருக்கின்றது. 

 கடந்த காலத்தில் இருந்ததை விட இந்த ஆட்சி நல்லாட்சியாக இருக்கும் என நினைத்து மக்கள் அதை பயன்படுத்தலாம்  என்றும் வாக்களித்தார்கள். ஆனால் தமிழ் மக்கள் தரப்பில் முன்னின்று வழிநடத்தியவர்கள் சரியாக அவர்களது கடமையை செய்யவில்லை. 

ஆகையால் வருகின்ற ஆட்சி நல்ல ஆட்சியாக இருக்கும். அதில் நான் பங்கெடுப்பேன் என்று நினைக்கிறேன்.  எனவே ஆட்சி வரும்போது அந்த ஆட்சியினுடைய வெற்றியில் மக்கள் பங்கெடுத்து, அதை தமது வெற்றியாக்கிக் கொள்ள வேண்டும். பொய்யான பரப்புரைகளுக்கு மக்கள் இடம் கொடுக்காத வகையில் மக்கள் செயற்பட வேண்டும் என தெரிவித்தார். 

இதேவேளை  சிறுபான்மை கட்சிகள் சஜித் பிரேமதாஷாவை  ஆதரிப்பதற்கான கருத்து நிலவிவருகின்ற நிலையில் அவரும் சிறுபான்மை கட்சிகளை  சந்தித்திருக்கின்றார். உங்களை சந்திக்க வாய்ப்பு இருக்கின்றதா? என ஊடகவியலாளர் கேட்டபோது. 

சந்திப்பதற்கான கோரிக்கைகள் இருக்கின்றது . ஆனால் இன்னும் சந்திப்பதற்கான வாய்ப்பு ஏற்படவில்லை.

என்னுடைய அனுபவத்தில் தென்னிலங்கையில் பெரும்பான்மை மக்களின் ஆதரவை பெற்று வெற்றி பெறுகின்றாரோ அவருக்கூடாக தான் எங்களுடைய மக்கள் பிரச்சினைகளை தீர்க்கலாம் என நம்புகிறேன். 

ஐக்கிய தேசிய கட்சியினரை பொறுத்த வரை இன்னும் தம் வேட்பாளர்களை அவர்கள் தெரிவு செய்யவில்லை. அது ஒரு இழுபறியில் இருக்கின்றது. தெரிவு செய்தாலும் மக்கள் பிரச்சினை தீரும் என நான் நினைக்கவில்லை. மகிந்த ராஜபக்ஷவினுடைய வேட்பாளர்கள் தான் வெற்றி பெறுகின்ற நிலை தான் தென்னிலங்கையில் காணப்படுகின்றது.

இவ் வெற்றியை  தமிழ் மக்களும் பங்கெடுத்து தமதாக்கி கொள்ள வேண்டும்.  அதனூடாக மக்களின் சகலவிதமான பிரச்சினைகளுக்கும் நிச்சயம்  தீர்வினை பெற்றுதருவேன். 

தமிழ்தேசிய கூட்டமைப்பினர் கூறுவது போல ஆட்சியாளர்கள் ஏமாற்றிவிட்டார்கள் என நான் கூறப்போவதில்லை.

மக்களுக்கு எதை கூறுகின்றேனோ அதை வென்று கொடுத்து மக்களின் நலன்களை முன்னிறுத்துவதுதான்  என் அணுகுமுறையாக இருக்கும். 

ஜனாதிபதி தேர்தலில்  சிறுபான்மை கட்சியினரின் நிலைப்பாடு என்னவாக இருக்கும் என‌ வினவிய போது,

நான் இலங்கையன் என்ற வகையில் கூறுகிறேன். தமிழ் மக்கள் தமிழர்கள் என்ற அடையாளத்தையோ,  இலங்கையர் என்ற அடையாளத்தையோ கைவிட அவர்கள் தயாராக இல்லை.  தமிழ் மக்கள் தமிழர்களாகவும், இலங்கையர்களாகவும் தமிழ்அடையாளத்தோடு இருப்பதைத் தான் நான் விரும்புகிறேன்.

சிறுபான்மை கட்சியினர் இன்னும் தெளிவான நிலைப்பாட்டுக்கு வந்ததாக தெரியவில்லை.  25 வருடமாக பாராளுமன்றத்தில் நான் இருப்பதனால் அவர்களை தினமும் சந்தித்து அவர்களின் மனோநிலையை அறிந்த வகையில் அவர்கள் இன்னும் சரியான முடிவுக்கு வந்ததாக தெரியவில்லை. 

வழமை போல காரணங்களை கூறிக்கொண்டு இருக்கிறார்கள். அவர்களுக்கான வாய்ப்பு எங்கு கிடைக்கின்றதோ அந்த பக்கம்செல்வார்கள் இது தான் இன்றைய அரசியல். நான் ஆரம்பத்தில் எதை கூறினேனோ அதனையே கூறுகின்றேன் என மேலும் தெரிவித்தார்.