(இராஜதுரை ஹஷான்)

 ஜனாதிபதி தேர்தலுக்கு வேட்புமனுத்தாக்கல் செய்வதற்கு முன்  பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோத்தாபய ராஜபக்ஷவை கைது செய்ய அரசாங்கம் தற்போது  பல முயற்சிகளை மேற்கொள்கின்றது.

சட்டத்தை தனது தேவைக்கேற்ப உருவாக்க  முடியும் என்று குறிப்பிடும்  சட்டமா அதிபர் திணைக்கள சொலிஸ்டர் ஜெனரல் தில்ருக்ஷி டயஸ் விக்ரமரத்ன பதவி விலக்கப்பட வேண்டும் என பாராளுமன்ற உறுப்பினர்  விமல் வீரவன்ச தெரிவித்தார். 

தேசிய சுதந்திர முன்னணியின் தலைமை காரியாலயத்தில்  நேற்று சனிக்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக் கொண்டு கருத்துரைக்கையில் அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

வேட்புமனுத்தாக்கல் செய்வதற்கு முன்னர் பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோத்தபய ராஜபக்ஷவை கைது செய்ய  அரசாங்கம் தற்போது பாரிய முயற்சிகளை மேற்கொள்கின்றது. 2015ம் ஆண்டு  ஆதாரங்கள் இன்றி சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுக்கள் கடந்த நான்கு வருட காலமாக  தீர்வு காண்பதற்காக எடுத்துக் கொள்ளப்படவில்லை. 

பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளராக கோத்தபய ராஜபக்ஷ அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து புதிய பல விடயங்களுக்கு அரசாங்கம் தற்போது புத்துயிர் கொடுக்க முயற்சிக்கின்றது.  அரசாங்கம் எவ்வாறான முயற்சிகளை மேற்கொண்டாலும் அவை தோல்வியிலே முடியும்.   நீதிமன்றம் அரசியல்வாதிகளின் தேவைகளுக்கு  ஏற்ப  செயற்படாது என்ற நம்பிக்கை காணப்படுகின்றது.

கடந்த அரசாங்கத்தை பழிவாங்கும் நோக்கத்தில் சுயாதீன ஆணைக்குழுக்கள் செயற்பட்டுள்ளது. என்ற விடயம் தற்போது இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவின் நிறைவேற்று பணிப்பாளரின்  தகவலுக்கு அமைய வெளிப்பட்டுள்ளது.

தன்னாள் சட்டத்தை இயற்றவும், மீறவும் முடியும் என இவர் குறிப்பிட்டுள்ளமை தொடர்பில் சட்டத்தின் மீதான  நம்பிக்கை கேள்விக்குறியாக்கப்பட்டுள்ளது. சட்டமா அதிபர் திணைக்களத்தின் சொலிஷ்டர் ஜெனரலாக பதவி வகிக்கும் பட்சத்தில்  எவ்வாறு  நீதித்துறை சுயாதீனமாக செயற்பட முடியும். ஆகவே  இவரை உடனடியாக பதவி விலக்கி , அரசியல் அழுத்தத்தின் காரணமாகவே  எவன்காரட் விவகாரத்தில் கோத்தபய ராஜபக்ஷவிற்கு எதிராக வழக்கு தாக்கல் செய்தேன் என்று குறிப்பிட்டுள்ளமை தொடர்பிலும்  சுயாதீன விசாரணைகளை முன்னெடுக்க வேண்டும் என்றார்.