2014ம் ஆண்டு ஐ.எஸ் எனப்படும் கொடூர மதத்தீவிரவாத அமைப்பின் பிடியிலிருந்து தப்பித்த ஆயிரத்திற்கும் மேற்பட்ட அகதிகள் அவுஸ்திரேலியாவில் தஞ்சமடைந்துள்ளனர். மேற்கு ஈராக்கின் சின்ஜர் மலைப்பகுதியிலிருந்து  வெளியேறிய இந்த அகதிகள் இன்று புதியதொரு வாழ்வை அவுஸ்திரேலியாவில் தொடங்கியுள்ளனர். 

ஈராக்கின் சின்ஜர் மலையிலிருந்து வெளியேறிய லைலா தனது அனுபவத்தை பகிரும் போது, “ஈராக்கில் ஐ.எஸ்.ஐ.எஸ் ஏராளமான ஆண்களையும் குழந்தைகளையும் கொன்றுள்ளது. ஐ.எஸ்.ஐ.எஸ் வந்த பிறகு, நாங்கள் மலைக்கு சென்றோம். குடும்பத்துடன் மலையில் வசித்த நாங்கள் உணவின்றி தண்ணீரின்றி இருந்தோம். ஐந்து நாட்கள் நடந்தே சென்ற நிலையில் குர்தீஸ்தானை அடைந்தோம்,” என அவர் கூறியுள்ளார். 

அவுஸ்திரேலியாவுக்கு அவரது கணவர் மற்றும் குழந்தையோடு வந்த லைலா, சமீபத்தில் அவரது உறவினர்களுடன் மீண்டும் இணைந்திருக்கிறார். 

“எனது குடும்பத்தினர் அனைவரும் வந்த பிறகு எனக்கு இங்கு இருப்பது சுலபமாக இருக்கிறது. நாங்கள் அவுஸ்திரேலியாவில் பாதுகாப்பாக உணர்கிறோம்,” எனக் கூறியிருக்கிறார். 

இப்படி பல அகதிகள் எதிர்காலம் குறித்து நம்பிக்கையுடன் அவுஸ்திரேலியாவில் இருக்கிறார்கள். ஷஹாப்பும் அவர்களில் ஒருவர். “நான் இங்கு மூன்று மாதங்களாக இருக்கிறேன். ஈராக்கிலிருந்து நேரடியாக அவுஸ்திரேலியா வந்துள்ளேன்,” என்கிறார். 

முன்னாள் பல்கலைக்கழக பேராசிரியரான ஷஹாப் முகாமில் ஐந்து ஆண்டுகளுக்கு மேல் கழித்துள்ளார். “நாங்கள் எட்டு பேர், ஒரே டெண்டில் வாழ்ந்தோம். நைலான் டெண்ட் என்பதால் பனிக்காலத்தில்  கடுங்குளிரும் வெயில் காலத்தில் கடும் வெப்பமும் இருக்கும்,” என நினைவை பகிர்ந்திருக்கிறார். 

இவர்களில் பெரும்பாலான அகதிகள் மெல்பேர்னுக்கும் சிட்னிக்கும் இடையில் உள்ள வக்கா வக்கா (Wagga Wagga) என்ற பகுதியில் மீள்குடியேற்றப்பட்டுள்ளனர்.

அண்மையில் வக்காவில் பேரணி ஒன்றை நடத்திய யாசிதி அகதிகள், ஈராக் முகாம்களில் தங்கியுள்ள உறவினர்களுக்கு அவுஸ்திரேலியா உதவ வேண்டும் எனக் கோரிக்கை விடுத்துள்ளனர். “தங்களுக்கு நடந்தவற்றை நிறுத்த தங்களுக்கு நீதி வேண்டும்,” எனக் கூறும் யாசிதி அகதிகள் ஈராக்கில் உள்ள மக்களின் நிலை குறித்து வருத்தம் கொண்டுள்ளனர். 

சுமார் 3,000 யாசிதி அகதிகளுக்கு அவுஸ்திரேலியாவின் மனிதாபிமான திட்டத்தின் கீழ் விசா வழங்கப்பட்டுள்ளது. இவர்களைப் போல் மேலும் பல யாசிதிகளுக்கு தஞ்சமளிக்கமாறும் கோரிக்கைகள் எழுந்துள்ளன.