பான்பசிபிக் பகிரங்க டென்னிஸ் சர்வதேச டென்னிஸ் போட்டி ஜப்பானின் ஒசாகா நகரில் நடந்து வருகிறது. 

இதில் நேற்று இடம்பெற்ற போட்டிகளில் உலகின் 4 ஆம் நிலை வீராங்கனையான ஜப்பானின் நவோமி ஒசாகா ஒரே நாளிலேயே இரட்டை வெற்றிபெற்றுள்ளார்.

காலிறுதி ஆட்டம் ஒன்றில் கஜகஸ்தான் வீராங்கனையான யுலியா புதின்ட்செவாவை 6-4, 6-4 என்ற நேர் செட் கணக்கில் வீழ்த்தி அரையிறுதிப் போட்டிக்குள் நுழைந்தார்.

அரையிறுதி ஆட்டத்தில் பெல்ஜியம் வீராங்கனை எலிஸ் மெர்டென்சை எதிர்கொண்ட ஒசோகா 6-4, 6-1 என்ற நேர் செட் கணக்கிலும் வெற்றிபெற்றார்.

இதன் மூலம் இன்று நடைபெறவுள்ள இறுதிப் போட்டியில் ரஷ்யா வீராங்கனையான பாவ்லிசென்கோவாவுடன் நவோமி பலப்பரீட்டை நடத்தவுள்ளார். 

பாவ்லிசென்கோவா அரையிறுதிப் போட்டியில் ஜெர்மனி வீராங்கனை ஏஞ்சலிக் கெர்பரை 6-3, 6-3 என்ற நேர் செட் கணக்கில் வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு தகுதிபெற்றமையும் குறிப்பிடத்தக்கது.