நிறைவேற்றதிகார ஜனாதிபதி பதவியை இரத்து செய்ய வேண்டும் என்பது அன்று முதல் இன்று வரை தான் பின்பற்றும் அரசியல் கொள்கையாகும் எனத் தெரிவித்த ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, அச் செயற்பாடுகளுக்கு தடையாக இருந்தது தான் அல்ல பாராளுமன்றமே என்றும் தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள இந்த தருணத்தில் அதற்காக முயற்சிப்பது வேடிக்கையான விடயம் என்றும் தெரிவித்தார்.

இன்று பிற்பகல் நாவுலவில் இடம்பெற்ற ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் மாத்தளை மாவட்டத்திற்கான மாநாட்டின்போதே ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன அவர்கள் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

நிறைவேற்றதிகார ஜனாதிபதி முறைமையை இரத்து செய்வதற்காக அண்மையில் கூட்டப்பட்ட அவசர அமைச்சரவைக் கூட்டமானது, தனது தேவைக்காக கூட்டப்பட்டதாக பிரதமரால் முன்வைக்கப்படும் குற்றச்சாட்டு முற்றிலும் தவறானது என்றும் அந்த அமைச்சரவைக் கூட்டம் பிரதமரின் தேவைக்கமையவே கூட்டப்பட்டதாக ஜனாதிபதி தெரிவித்தார்.

தற்போது ஊடகங்களில் வெளியாகியிருக்கும் இலஞ்ச, ஊழல் விசாரணை ஆணைக்குழுவின் முன்னாள் பணிப்பாளர் நாயகத்தின் ஒளிநாடா குறித்து கருத்துத் தெரிவித்த ஜனாதிபதி, பணிப்பாளர் நாயகம் தனக்கு அறிவிக்காமல் இராஜினாமா செய்ததாகவும் முன்னாள் முப்படைத் தளபதிகளை நீதிமன்றத்திற்கு கொண்டுசென்றபோது தான் கூறிய விடயம் ஒன்றிற்காக பதவி விலகினார் என்றும் தெரிவித்தார்.

காலை முதல் பிற்பகல் 04.00 மணி வரை இலஞ்ச, ஊழல் ஆணைக்குழுவில் கடமைகளை நிறைவுசெய்து பிற்பகல் 06.00 மணிக்கு பின்னர் அலரிமாளிகையின் இலஞ்ச, ஊழல் செயலகத்தில் கடமைபுரியும் திருமதி.தில்ருக்ஷி டயஸை உயர்நீதிமன்ற நீதிபதியாக நியமிக்குமாறு அண்மையில் பிரதமரால் முன்வைக்கப்பட்ட கோரிக்கையை நினைவுகூர்ந்த ஜனாதிபதி, தில்ருக்ஸி டயஸின் ஒளிநாடாவில் குறிப்பிட்டுள்ள விதத்தில் தவறான முறையில் வழங்குத் தாக்கல் செய்வதற்கு அவருக்கு ஆலோசனை வழங்கிய கீழ்த்தரமான அரசியல்வாதிகள் யார் என்பதை நாட்டுக்கு வெளிக்கொண்டு வருமாறும் அதனை நாட்டு மக்களுக்கு தெரிவிப்பது மிகவும் அவசியமான விடயம் என்றும் தெரிவித்தார்.

நேற்றைய தினம் ஜனாதிபதிக்கும் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவம் தொடர்பாக ஆராயும் பாராளுமன்ற தெரிவுக்குழு பிரதிநிதிகளுக்குமிடையில் இடம்பெற்ற கலந்துரையாடல் தனது தேவைக்காக ஊடகங்களுக்கு வெளிப்படுத்தவில்லை என்று கூறப்படும் பொய் குற்றச்சாட்டு குறித்து கருத்துத் தெரிவித்த ஜனாதிபதி, அந்த கலந்துரையாடலை ஆரம்பம் முதல் இறுதி வரை ஊடகங்களுக்கு வெளிப்படுத்துவதற்கு தான் அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொண்டிருந்ததாகவும் அதனை ஊடகங்களுக்கு வெளியிட வேண்டாம் என்று பாராளுமன்ற தெரிவுக்குழுவே கோரிக்கை முன்வைத்ததாகவும் தெரிவித்தார்.

குறித்த சம்பவம் தொடர்பில் கருத்துக்கள் மற்றும் பரிந்துரைகளை பெற்றுக்கொள்ளும் நோக்கில் தெரிவுக்குழு தன்னிடம் கோரிக்கை முன்வைத்ததாகவும் தனது விருப்பத்தின்படி செயற்படலாம் என சட்டமா அதிபர் தெரிவித்திருந்த போதிலும் ஜனநாயகத்திற்கு மதிப்பளிக்கும் தலைவர் என்ற வகையில் தான் அந்த குழுவின் கோரிக்கையை ஏற்றதாகவும் குறிப்பிட்ட ஜனாதிபதி, தன்னிடம் மூடி மறைப்பதற்கு எந்தவொரு காரணமும் இல்லாமையினால் அனைத்து விடயங்களையும் தெரிவுக்குழு உறுப்பினர்களுக்கு தான் தெரிவித்தாகவும் குறிப்பிட்டார்.

ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியை நாடளாவிய ரீதியில் ஒருங்கிணைக்கும் மாவட்ட மாநாட்டுத் தொடரின் மாத்தளை மாவட்ட மாநாடு ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் தலைவர் ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன அவர்களின் தலைமையில் பெருந்திரளான கட்சி உறு்பபினர்களின் பங்குபற்றலில் இன்று பிற்பகல் நாவுலயில் இடம்பெற்றது.

மேலும் கருத்துத் தெரிவித்த ஜனாதிபதி, புதிதாக எத்தனை அரசியல் கட்சிகள் தோற்றம் பெற்றாலும் அக்கட்சிகளின் கொள்கைகள் மற்றும் வேலைத்திட்டம் எந்தளவிற்கு மக்களுக்கு நன்மை பகர்க்கும் என்பதை பொதுமக்கள் கருத்திற்கொள்ள வேண்டும் என்றும் தெரிவித்தார்.

ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி ஒரு வலுவான அரசியல் கட்சி என்றும் எண்ணிக்கை அடிப்படையில் கணக்கிடுவதை விட அரசியல் கட்சியின் தரத்தை கருத்திற்கொள்ள வேண்டும் என்றும் எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலின்போது ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் அரசியல் சக்தியினூடாகவே ஜனாதிபதி ஒருவரை தெரிவுசெய்ய முடியும் என்றும் தெரிவித்தார்.

அனைவரையும் அரவணைத்து நாடு தொடர்பில் சிந்திக்கும் தேசிய வேலைத்திட்டமொன்றினை ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி முன்னெடுக்கும் என்றும் அதன் ஆற்றலை யாராலும் கட்டுப்படுத்த முடியாது என்றும் புதிதாக தோன்றியுள்ள அரசியல் கட்சிகளை விட வரலாற்று சிறப்புமிக்க ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியானது ஊழல், இலஞ்சம், சந்தர்ப்பவாதம், குடும்ப அரசியல் போன்ற எந்தவொரு குற்றச்சாட்டும் இல்லாத கட்சி என்றும் ஜனாதிபதி தெரிவித்தார்.

ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் சிரேஷ்ட உபதலைவர் நிமல் சிறிபால டி சில்வா, பொதுச்செயலாளர் தயாசிறி ஜயசேகர, ஐக்கிய மக்கள் விடுதலை கூட்டணியின் பொதுச்செயலாளர் மஹிந்த அமரவீர, லசந்த அழகியவன்ன, திலங்க சமதிபால, சாந்த பண்டார, மாத்தளை மாவட்ட அமைப்பாளர் லக்ஷ்மன் வசந்த பெரேரா ஆகியோர் உள்ளிட்ட ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் சிரேஷ்ட உறுப்பினர்கள் பலர் இச்சந்திப்பில் கலந்துகொண்டனர்.

இதனையடுத்து ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் அடுத்த மாநாடு நாளைய தினம் ஜனாதிபதி தலைமையில் மாத்தறை மாவட்டத்தில் இடம்பெறும்.