(இராஜதுரை ஹஷான்)

ஐக்கிய தேசிய  கட்சின் ஜனாதிபதி வேட்பாளர் ஐக்கிய தேசிய கட்சியின்  செயற்குழு, பாராளுமன்ற உறுப்பினர் குழு ஆகியவற்றின்  ஊடாகவே தெரிவு செய்யப்படுவார் என்று கட்சியின் தலைவர்  பிரதமர் ரணில் விக்ரமசிங்க,  பொதுச்செயலாளர் அகில விராஜ் காரியவசம் ஆகியோர் வழங்கிய வாக்குறுதியை  நிறைவேற்ற வேண்டும் என அமைச்சர் அஜித் பி பெரேரா தெரிவித்தார்.

செயற்குழுவின் உறுப்பினர் எண்ணிக்கையினை அதிகரிக்க  வேண்டும் என்று கட்சியின் தலைவர் குறிப்பிட்டுள்ளமை ஏற்றுக் கொள்ள கூடிய விடயமல்ல, அமைச்சர் சஜித்பிரேமதாச ஐக்கிய தேசிய கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் என்று உத்தியோகப்பூர்வமாக அறிவிப்பது மாத்திரமே தற்போது மிகுதியாகவுள்ளது எனவும் தெரிவித்தார்.

நிதியமைச்சர் மங்கள சமரவீரவின்  இல்லத்தில் உள்ள உத்தியோகப்பூர்வ அலுவலகத்தில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துரைக்கையில் அவர்மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.