(க.கமலநாதன்)

வடக்கு ஆளுநர் பதவியிலிருந்து என்னை விலக்குமாறு விடுக்கப்பட்டுள்ள கோரிக்கை தொடர்பில் நான் கவலையடையவில்லை.  அதனால் தளர்ந்துபோகவுமில்லை என்று வடக்கு  ஆளுநர்  ரெஜினோல்ட் குரே  தெரிவித்தார்.

வடக்கு மாகாண ஆளுநர் பதவியிலிருந்து  ரெஜினோல்ட் குரேயை மீளப்பெறவேண்டும் என்று கோரி  தமிழீழ விடுதலை இயக்கம் கட்சியின்  செயலாளரும் சிரேஷ்ட சட்டத்தரணியுமான   சிறிகாந்தா ஜனாதிபதிக்கு கடிதம் எழுதியுள்ளமை குறித்து  கேட்டபோதே  அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.  

இது தொடர்பில் ஆளுநர் ரெஜினோல்ட் குரே  மேலும் தெரிவிக்கையில்,

என்னை விலக்குமாறு கோருவதானது   இனவாதிகளுக்கு  தீனிபோடுவதாக அமைந்துவிடும் என்பது குறித்து நான் கவலையடைகின்றேன். 

மேலும் நான்கூறியதாக ஊடகங்களில் வெளிவந்த செய்திகள்  திரிபுபடுத்தப்பட்டுள்ளன. எனவே என்மீது விமர்சனங்களை முன்வைத்துள்ளவர்களை சந்தித்து விளக்கமளிப்பதற்கும் நான் எதிர்பார்க்கின்றேன்.   

தேசிய நல்லிணக்கத்தின்  பெறுமதியை உணர்ந்தாமையினாலேயே ஜனாதிபதி என்போன்ற ஒருவரை  வடக்கு ஆளுநராக நியமித்துள்ளார்.

கொழும்பில் நான் நடத்திய செய்தியாளர் மாநாட்டில் என்னிடம் பல கேள்விகள் கேட்கப்பட்டன. அவற்றுக்கு நான் பதிலளித்தேன். குறிப்பாக   புலிகளை  நினைவுகூர முடியாது என்றும்  இறந்தவர்களை  நினைவுகூர  அனைவருக்கும் உரிமை உள்ளது என்றும் கூறினேன்.   

அத்துடன்  படுகொலை என்ற பெயரில்  வடக்கு மாகாண சபையில் நிறைவேற்றப்பட்ட  பிரேரணை  தொடர்பாக  கேள்வி எழுப்பப்பட்டது. ஆனால்  மாகாண சபையில் அவ்வாறு  பிரேரணை நிறைவேற்றினாலும் அது    சட்டமாகாது என்றும்  பாராளுமன்றமே இறுதி தீர்மானம் எடுக்கும் இடம் என்றும் கூறினேன்.    ஆனால் ஊடகங்களில்  தவறான புரிதலுடன் செய்திகள் வெளிவந்தன. 

நான் எந்தவொரு இடத்திலும் இனவாதம் பேசவில்லை.  நான் இனவாதியல்ல.  ஒருபுறம் சரத் வீரசேகர  என்னை பதவிவிலக்கவேண்டும் என்று கூறுகின்றார். 

மறுபுறம்   முன்னாள் எம்.பி. சிறிகாந்தா  என்னை பதவி விலக்கவேண்டும் என்று கூறுகின்றார். இது தொடர்பில் நான் ஆச்சரியமடைகின்றேன் என தெரிவித்தார்.