ஈரான் மீது தாக்குதலை நாடு உலகின் முக்கிய போர்க்களமாக மாறும் என ஈரானிய இராணுவத்தின் புரட்சிகர காவல்படையின் தளபதி எச்சரிக்கை விடுத்துள்ளார்.

ஈரான் எந்த வகையான சூழ்நிலையை எதிர்கொள்வதற்கும் தயாராகவுள்ளது என மேஜர் ஜெனரல் ஹொசைன் சலாமி தெரிவித்துள்ளார்.

தங்கள் தேசம் முக்கிய போர்க்களமாக மாறவேண்டும் என விரும்பும் எவரும் எங்கள் மீது தாக்குதலை தொடுக்கலாம் என அவர் எச்சரித்துள்ளார்.

ஈரானின் எல்லையை எந்த யுத்தமும் அணுகுவதற்கு அனுமதிக்கமாட்டோம் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஈரான் தொடர்பில் அமெரிக்கா கடந்த காலங்களில் எடுத்த  நடவடிக்கைகள் தோல்வியில் முடிவடைந்ததை சுட்டிக்காட்டியுள்ள ஈரானிய இராணுவத்தின் புரட்சிகர காவல்படையின் தளபதி அவர்கள் மீண்டும் மூலோபாய தவறுகளையிழைக்கமாட்டார்கள் என கருதுவதாக தெரிவித்துள்ளார்.

உங்கள் ஆளில்லா விமானங்களிற்கு எங்கள் வான்பரப்பில் என்னவேலை? நாங்கள் அதனை சுட்டுவீழ்த்துவோம் எங்கள் வான்பரப்பை  நோக்கி வரும் எதனையும் சுட்டுவீழ்த்துவோம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

வான்வெளி பாதுகாப்பு மற்றும் ஆளில்லா விமானங்கள் தயாரிப்பது போன்ற விடயங்களில் அமெரிக்காவின் தொழில்நுட்ப திறனை ஈரான் மிஞ்சிவிட்டது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

அமெரிக்கா சில வேளைகளில் மட்டுப்படுத்தப்பட்ட இராணுவநடவடிக்கைகளில் ஈடுபடலாம் ஆனால் மட்டுப்படுத்தப்பட்ட இராணுவநடவடிக்கை மட்டுப்படுத்தப்பட்டதாக நீடிக்காது ஈரான் ஆக்கிரமிப்பாளர்கள் வீழ்ச்சியடையும் வரை ஓயாது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

ஈரானினால் கைப்பற்றப்பட்ட அமெரிக்காவின் ஆளில்லா விமானங்களை காட்சிப்படுத்தும் நிகழ்விலேயே அவர் இதனை தெரிவித்துள்ளார்.