தமிழ்நாட்டில் வெற்றிடமாக உள்ள நாங்குநேரி மற்றும் விக்கிரவாண்டி ஆகிய இரண்டு தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் திகதியை இந்தியத் தேர்தல் ஆணையாளர் சுனில் அரோரா அறிவித்துள்ளார்.

இதுதொடர்பாக புது டில்லியில் அவர் செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது,

“மகாராஷ்டிரா மாநில சட்டப்பேரவையின் பதவிக்காலம் நவம்பர் 9ஆம் திகதியன்றும், ஹரியானா மாநில சட்டப்பேரவையின் பதவிக் காலம் நவம்பர் இரண்டாம் திகதியன்று நிறைவடைகிறது. எனவே இவ்விரண்டு மாநிலங்களில் ஒக்டோபர் 21ஆம் திகதியன்று ஒரே கட்ட மாக சட்டப்பேரவைக் கான பொதுத்தேர்தல் நடைபெறும். 

அதே தருணத்தில் தமிழகத்தில் காளியாக உள்ள விக்கிரவாண்டி, நாங்குநேரி ஆகிய இரண்டு தொகுதிகளுக்கும், புதுச்சேரியில் உள்ள காமராஜ் நகர் தொகுதிக்கும் ஒக்டோபர் 21ஆம் திகதியன்று இடைத்தேர்தல் நடத்தப்படும். வாக்கு எண்ணிக்கை ஒக்டோபர் 24 ஆம் திகதியன்று நடைபெறும்.

இதற்கான வேட்பு மனுத் தாக்கல் செப்டெம்பர் 23ஆம் திகதி ஆரம்பமாகின்றது.வேட்பு மனுத்தாக்கல் செப்டம்பர் 30 ஆம் திகதியன்றுடன் முடிவடைகிறது. வேட்புமனுக்கள் ஒக்டோபர்  முதலாம் திகதியன்று பரிசீலனை செய்யப்படுகின்றன. வேட்பு மனுக்களைத் திரும்பப் பெற ஒக்டோபர் 3 ஆம் திகதி கடைசி நாளாகும். தேர்தல் திகதி அறிவிக்கப்பட்டிருக்கும் தொகுதிகளில் தேர்தல் நடத்தை விதிமுறைகள் உடனடியாக அமுலுக்கு வருகின்றன.” என்றார்.

தமிழகத்தில் இடைத்தேர்தல் திகதி அறிவிக்கப்பட்டிருப்பதால் அ.தி.மு.க. மற்றும் தி.மு.க. கூட்டணிக் கட்சிகளிடையே தேர்தல் நடவடிக்கைகள் சுறுசுறுப்படைந்திருக்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது.