இன்றைய திகதியில் ஆண்களுக்கு முப்பது வயதிற்குள்ளாகவே தலைமுடி உதிர்வு ஏற்பட்டு, வழுக்கை உண்டாகிறது. இதற்கு முடி மாற்று சத்திரசிகிச்சை சிறந்த பலனை அளிக்கிறது.

பாரம்பரிய மரபணு, மன அழுத்தம், உணவு பழக்க வழக்கம் மற்றும் வாழ்க்கை நடைமுறையில் ஏற்பட்ட மாற்றம் ஆகிய காரணங்களால் தலைமுடி உதிர்வு ஏற்படுகிறது. சிலர் இதனை இயல்பாக எடுத்துக்கொள்கிறார்கள். பலர் இதனை தங்களுடைய தன்னம்பிக்கை சார்ந்த, சமூக மதிப்புடன் கூடிய விடயமாக கருதுவதால் இதற்காக பிரத்தியேக சிகிச்சையை மேற்கொள்வதால் ஆர்வம் காட்டுகிறார்கள்.

வழுக்கை ஏற்பட்டவர்களுக்கு முதலில் சாதாரண பரிசோதனை மற்றும் இயல்பான மருந்துகளும் பிளேட்லெட் ரிச் பிளாஸ்மா எனப்படும் சிகிச்சைகளும் அளிக்கப்பட்டு, முடி உதிர்தல் தடுக்கப்பட்டு, முடி வளர்கிறதா..? என்று ஆராயப்படுகிறது. அதற்குப் பின்னரும் முடிஉதிர்தல் நிற்காமல் முடி வளரவில்லை என்றால், அவர்களின் உடலில் உள்ள வேறு சில மருத்துவ ரீதியான பாதிப்புகளையும், நிலைகளையும் ஆராய்ந்து, அவர்களுக்கு முடி மாற்று சத்திர சிகிச்சைக்கு பரிந்துரை செய்கிறார்கள்.

முடி மாற்று சத்திரசிகிச்சை உடனடியாக மேற்கொள்வதில்லை. இதற்கு முதலில் பயனாளி மனதளவில் தயாராக வேண்டும். அவர்களுக்கு வழுக்கை ஏற்பட்டிருந்தாலும் Occipital Hair எனப்படும் பின் மண்டை முடி ஆரோக்கியமாக இருக்கும். அவை அளவில் சிறியதாக இருந்தாலும், அதனுடைய வேர்ப்பகுதி உயிர்ப்புடன் இருக்கும். முடி மாற்று சத்திர சிகிச்சையில் Follicular Unit Transplantation மற்றும் Follicular Unit Extraction  என இரண்டு வகையான சத்திர சிகிச்சை இருக்கிறது. 

 Follicular Unit Transplantation என்ற முறையில் பின் மண்டையில் இருக்கும் முடி, அதன் வேர்ப்பகுதியுடன் குறிப்பிட்ட அளவிற்கு சத்திரசிகிச்சை மூலம் அகற்றப்பட்டு, பிறகு அதிலிருந்து ஒவ்வொரு தலை முடியும் தனித்தனியாக பிரிக்கப்பட்டு, சுத்திகரிக்கப்பட்டு,செறிவூட்டப்பட்ட பிறகு வழுக்கை விழுந்த இடங்களில் பதியமிடப்படுகிறது. இத்தகைய சத்திரசிகிச்சை குறைந்தபட்சம் 6 மணித்தியாலம் வரை நடைபெறக்கூடும். ஆனால் இதனால் பின் மண்டையில் ஏற்படும் தழும்புகளை மறைக்க இயலாது.

ஆனால் Follicular Unit Extraction என்ற சத்திரசிகிச்சையின் முறையில், பின் மண்டையில் இருந்து ஒவ்வொரு முடியும், தனித்தனியே எடுக்கப்பட்டு அவை வழுக்கை விழுந்த முன்பகுதியில் பதியமிடப்படுகிறது. இதன் காரணமாக பின் மண்டை பகுதியில் தழும்புகள் ஏதும் ஏற்படுவதில்லை.

இத்தகைய முடி மாற்று சத்திர சிகிச்சைக்கு பின்னர் வழுக்கை பகுதியில், பதியமிடப்பட்ட பகுதியில், மூன்றிலிருந்து நான்கு வாரங்களுக்குள் தலை முடி இயல்பாக வளர தொடங்குகிறது. இது பாதுகாப்பானதாகவும் திகழ்கிறது. தொடர்ந்து மருத்துவர்களின் கண்காணிப்பில் மூன்று மாதங்கள் இருக்க வேண்டும். அதன்பிறகு நீங்கள் சிகை அலங்காரம் செய்து கொண்டாலும், மொட்டை அடித்துக் கொண்டாலும் மீண்டும் முடி வளரும். அத்துடன் பயனாளியின் தன்னம்பிக்கையும் வளர்ந்து. அவரிடமுள்ள மனிதவளத்தை முழுமையான அளவில் பயன்படுத்த தொடங்குவார்.

டொக்டர் சிவக்குமார்.

தொகுப்பு அனுஷா.