(எம்.எப்.எம்.பஸீர்)

கொழும்பு மற்றும் அதனை அண்டிய பகுதிகளில் 5 மாணவர்கள் உள்ளிட்ட 11 பேரை வெள்ளை வேனில் கடத்திச் சென்று கப்பம் பெற்றுக்கொண்டு காணாமல் ஆக்கிய  சம்பவத்தின் பிரதான சாட்சியாளர்களில் ஒருவரான கடற்படை லெப்டினன் கொமாண்டர் வெலகெதரவின் பாதுகாப்பை உறுதி செய்யவும்,  அவரது பாதுகாப்பு தொடர்பிலான விடயங்களை மேற்பார்வைச் செய்யவும் பாதுகாப்பு செயலர் ஜெனரல் சாந்த கோட்டேகொடவுக்கு கோட்டை நீதிவான் ரங்க திஸாநாயக்க உத்தரவிட்டுள்ளார்.   

குறித்த கடத்தல், கப்பம் பெறல் மற்றும் காணாமல் ஆக்கல்  சம்பவத்தின் விசாரணைகளை முன்னெடுக்கும் குற்றப் புலனாய்வுப் பிரிவின் சமூக கொள்ளை தொடர்பிலான விசாரணை அறையின் பொறுப்பதிகாரி பொலிஸ் பரிசோதகர் நிசாந்த சில்வா, இடையீட்டு மனுவொன்றூடாக கோட்டை நீதிவான் ரங்க திஸாநாயக்கவுக்கு முன்வைத்த விடயங்களை மையபப்டுத்தியே இந்த உத்தரவை நீதிவான் பிறப்பித்தார்.

2015 ஆம் ஆண்டின் 4 ஆம் இலக்க குற்றம் ஒன்றால் பாதிக்கப்பட்டோர், சாட்சியாளர்கள் பாதுகாப்பு சட்டத்தின் 22(10, 23,25 ஆம் அத்தியாயங்களுக்கு அமைய இந்த உத்தரவை  நீதிவான் பிறப்பித்துள்ளார்.