நடத்தையில் சந்தேகம் அடைந்ததால் காதலியை வெட்டிக்கொலைசெய்த சம்பவமொன்று தமிழகத்தில் இடம்பெற்றுள்ளது.

இச் சம்பவம் பற்றி மேலும் தெரியவருவதாவது,
தமிழகத்தின் சேலம் சூரமங்கலத்தைச் சேர்ந்த தீபா (37) வுக்கும் தர்மபுரியை சேர்ந்த ரமேஷ்க்கும் 15 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் இடம்பெற்றது.
இவர்கள் இருவருக்கும் 14 வயதில் ஒரு மகன் உள்ளான். கடந்த 6 ஆண்டுகளுக்கு முன்பு இருவரும் கருத்துவேறுபாடு காரணமாக பிரிந்துள்ளனர்.
இந்நிலையில், தீபா தனது தாயுடன் சேலம் பெரமனூர் பகுதியில் குடியேறினார். அப்போது அதே பகுதியை சேர்ந்த கார் சாரதியான லோகேஸ்வரன் (26) என்பவருடன் தீபாவுக்கு பழக்கம் ஏற்பட்டது. நாளடைவில் அது கள்ளத்தொடர்பாக மாறியது.
இதையடுத்து இருவரும் திருமணம் செய்யாமல் ஒரே வீட்டில் வசித்து வந்தனர். இவர்களுக்கு 4 வயதில் ஒரு பெண் குழந்தை உள்ளது. இதனிடையே லோகேஸ்வரனுடன் தீபாவுக்கு கருத்து வேறுபாடு ஏற்பட்டது.
இதனால் அவர் கோபித்துக்கொண்டு தாயுடன் ஜாகீர்ரெட்டிப்பட்டிக்கு சென்றுள்ளார். லோகேஸ்வரன் அடிக்கடி அங்கும் சென்று வந்துள்ளார்.
இதற்கிடையே, லோகேஸ்வரனுக்கு தீபாவின் நடத்தையின் மீது சந்தேகம் ஏற்பட்டது. இதனால் தகராறு ஏற்பட்டுள்ளது.
இந்தநிலையில், லோகேஸ்வரன் ஜாகீர்ரெட்டிப்பட்டியிலுள்ள தீபா வீட்டுக்கு சென்றுள்ளார். அங்கு அவர்கள் இருவருக்கும் இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டுள்ளது.
இதனால், கோபமடைந்த லோகேஸ்வரன் வாளால் தீபாவின் கழுத்து மற்றும் நெற்றியில் வெட்டியுள்ளார்.
இதில் சம்பவ இடத்திலேயே தீபா உயிரிழந்தார். தகவல் அறிந்த சூரமங்கலம் பொலிஸார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று, லோகேஸ்வரனை கைது செய்து விசாரணைகளை மேற்கொண்டு நீதிமன்றத்தில் ஆஜர் படுத்திய நிலையில், அவர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.