2019 ஆம் ஆண்டுக்கான ரக்பி உலகக் கிண்ணப் போட்டியானது இன்றைய தினம் ஜப்பானில் கோலாகலமாக ஆரம்பாகியுள்ளது.

இந்த ஆண்டுக்கான ரக்பி உலகக் கிண்ணத் தொடரின் முதல் போட்டி ஜப்பான் மற்றும் ரஷ்ய அணிகளுக்கிடையே இடம்பெற்று வருகின்றது.

இன்று ஆரம்பமாகயுள்ள ரக்பி உலகக் கிண்ணத் தொடரானது எதிர்வரும் நவம்பர் மாதம் 2 ஆம் திகதி வரை யோகோஹாமா, டோக்கியோ, சப்போரா உள்ளிட்ட 12 முக்கிய நகரங்களில் உள்ள 12 மைதானங்களில் இடம்பெறவுள்ளன.

மொத்தமாக 20 நாடுகள் கலந்துகொள்ளும் இத் தொடரில் 'ஏ', 'பி', 'சி','டீ' என நான்கு குழுக்களாக அணிகள் பிரிக்கப்பட்டுள்ளன. 

குழு 'ஏ' யில் அயர்லாந்து, ஸ்கெட்லாந்து, ஜப்பான், ரஷ்யா மற்றும் சாமோவா உள்ளிட்ட நாடுகளும், குழு 'பி' யில் நியூஸிலாந்து, தென்னாப்பிரிக்கா, இத்தாலி, நமீபியா மற்றும் கனடா உள்ளிட்ட நாடுகளும், குழு 'சி' யில் இங்கிலாந்து, பிரான்ஸ், ஆர்ஜெண்டீனா, அமெரிக்கா மற்றும் டோங்கா உள்ளிட்ட நாடுகளும், குழு 'டீ' யில் அவுஸ்திரேலியா, வேல்ஸ், ஜோர்ஜியா, பீஜி மற்றும் உருகுவே போன்ற நாடுகளும் உள்ளடக்கப்பட்டுள்ளன. 

இத் தொடரில் மொத்தமாக 93 போட்டிகளில் இடம்பெறவுள்ளன. 

லீக் போட்டிகளின் முடிவில் நான்கு குழுக்களிலுமிருந்து முதலிரு இடங்களை பிடிக்கும் 8 அணிகள் காலிறுதி சுற்றுக்குள் நுழையும். 

காலிறுதி சுற்றில் இந்த எட்டு அணிகளும் இரண்டு குழுக்களாக பிரிக்கப்பட்டு ஒன்றுடன் ஒன்று மோதும், அதில் இரு குழுக்களிலும் வெற்றிபெற்ற அணி அரையிறுதிப் போட்டிக்குத் தகுதிபெறும்.

அரையிறுதிப் போட்டியானது  டோக்கியோ மற்றும் யோகோஹாமாவில் நடைபெறுவதுடன், இறுதிப் போட்டியானது நவம்பர் மாதம் 2 ஆம் திகதி யோகோஹாமாவில் இடம்பெறும்.

கடந்த 2015 ஆம் ஆண்டு இங்கிலாந்தில் நடைபெற்ற ரக்பி உலகக் கிண்ணத் தொடரில் நியூ­ஸி­லாந்து அணி, 34 - 17 என்ற கணக்கில் அவுஸ்­தி­ரே­லி­யாவை வீழ்த்தி சம்­பியன் பட்­டத்தை வெற்றிக்கொண்டமையும் குறிப்பிடத்தக்கது.