நடிகை நயன்தாரா நடிப்பில் தயாராகும் ‘நெற்றிக்கண்’ என்ற படத்தில், அவர் பார்வைத்திறன் சவால் உள்ளவராக நடிக்கிறார்.

நடிகை நயன்தாராவின் நடிப்பில் இந்த ஆண்டில் வெளியான விசுவாசம் படத்தை தவிர, ஐரா, மிஸ்டர் லோக்கல், கொலையுதிர் காலம் ஆகிய மூன்று படங்களும் தோல்வியைத் தழுவின. இதனால் ஒரு வெற்றியை தரவேண்டிய கட்டாயத்தில் அவர் இருக்கிறார். இந்த தருணத்தில் இயக்குனர் விக்னேஷ் சிவன் தயாரிப்பில் இயக்குனர் மிலிந்த் ராவ் இயக்கத்தில் தயாராகும் ‘நெற்றிக்கண்’ என்ற படத்தில் கதையின் நாயகியாக நடித்து வருகிறார்.

இந்தப் படம் குறித்து இயக்குனர் மிலிந்த ராவ் தெரிவிக்கையில்,“ இந்தப்படத்தில் நடிகை நயன்தாரா கதையின் நாயகியாக நடிக்கிறார். பார்வை திறன் சவால் உள்ளவராகவும், துப்பறியும் நிபுணராகவும் நடிக்கிறார். 

2011 ஆம் ஆண்டில் கொரிய மொழியில் வெளியான ‘ப்ளைன்ட்’ என்ற படத்தின் தமிழ் ரீமேக் உரிமையை அதிகாரப்பூர்வமாக வாங்கி, தமிழ் சூழலுக்கு ஏற்றவாறு சில மாற்றங்களை செய்து திரைக்கதையை அமைத்திருக்கிறோம். இந்த படத்திற்கு ‘நெற்றிக்கண்’ என்ற தலைப்பு பொருத்தமாக இருக்கும் என்பதற்காக, அந்த தலைப்பை தங்களிடம் வைத்திருக்கும் கவிதாலயா நிறுவனத்திடம் பேச்சுவார்த்தை நடத்தி, அந்த தலைப்பையே பெற்றிருக்கிறோம்.” என்றார்.

இதனிடையே இயக்குனர் ராவ் இதற்கு முன் சித்தார்த் நடித்த ‘அவள்’ என்ற ஹாரர் படத்தை இயக்கி வெற்றி கண்டவர். அத்துடன் நடிகை நயன்தாரா தற்பொழுது தளபதி விஜயுடன் ‘பிகில்’ படத்திலும், தெலுங்கின் முன்னணி நடிகரான சிரஞ்சீவியுடன் ‘சை ரா நரசிம்ம ரெட்டி’ என்ற படத்திலும், சுப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் ஜோடியாக ‘தர்பார் ’படத்திலும் நடித்து வருகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.