இந்தியாவில், சென்னையில் வேலைக்கு சேர்ந்து ஒரு நாள்கூட பணியில் முழுமையாக ஈடுபடாமல், நிறுவனத்தின் 8-வது மாடியில் இருந்து விழுந்து இளம்பெண் ஒருவர் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

திருச்சியை சேர்ந்த டெனிதா ஜீலியஸ் எனும் யுவதிக்கு வயது 24. சென்னை அம்பத்தூர் தொழிற்பேட்டையில் பகுதியில் உள்ள தனியார் நிறுவனமொன்றில் வேலை கிடைத்துள்ளது. இந்நிலையில், நேற்று வேலையில் சேர்ந்தார். நேற்றிரவு வேலை முடிந்தபிறகு நிறுவனத்தின் 8வது மாடியில் இருந்து திடீரென விழுந்து உயிரிழந்தார். இதை பார்த்த அங்கிருந்த ஊழியர்கள் அதிர்ச்சியில் உறைந்துள்ளனர். 

இதனையடுத்து ,உடனடியாக பொலிஸிற்கும் தகவல் தெரிவித்தனர். பின்னர் சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார் டெனிதாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக வைத்தியசாலைக்கு அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும், நேற்றுதான்  டெனிதா வேலையில் சேர்ந்ததால், இவரை பற்றி அலுவலகத்தில் யாருக்குமே எந்த விவரமும் தெரியவில்லை. இந்நிலையில், உண்மையிலேயே டெனிதா தற்கொலை செய்து கொண்டாரா, அல்லது தவறி விழுந்தாரா என தெரியவில்லை. 8-வது மாடிக்கு அந்த நேரத்தில் ஏன்  சென்றார் என்ற சந்தேகமும் எழுந்துள்ளது.

அந்த நிறுவனத்தின் 9வது மாடியில் உள்ள சிற்றூண்டிசாலையில் இருந்து, தடை செய்யப்பட்ட மாடிப்படி வழியாக கீழ் தளத்துக்கு இறங்க முயன்ற போது, டெனிதா தவறி விழுந்து இறந்திருக்கலாம் என்றும்  தெரியவந்துள்ளது. 

இதனால் அங்கிருக்கும் சிசிடிவி கேமராவை கொண்டே பொலிஸார் ஆய்வு செய்து வருவதாக அந்நாட்டு ஊடகங்கள் தகவல் வழங்கியுள்ளன.