(செ.தேன்மொழி)

ஹெரோயின் கடத்தல் தொடர்பில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த பாக்கிஸ்தானைச் சேர்ந்த பெண்ணொருவர் உட்பட 5 சந்தேக நபர்களுக்கு நீர்கொழும்பு நீதவான் நீதிமன்றம் ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பு வழங்கியுள்ளதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்தது.

ஹெரோயின் போதைப்பொருளை இந்நாட்டுக்கு கடத்தியமை மற்றும் வைத்திருந்தமை தொடர்பில் பொலிஸ் போதைப் பொருள் பிரிவினரால் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த  குற்றவாளிகளுக்கே நேற்று இவ்வாறு தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. 

கடந்த 2016 ஆம் ஆண்டு மே மாதம் 29 ஆம் திகதி 260 கிராம் ஹெரோயினுடன் கைது செய்யப்பட்ட கஞ்சி சாகுஃத்னாஸ் என்ற குற்றவாளிக்கு எதிராக  537/2019 என்னும் வழக்கு எண்ணிலும் , அதே வருடம் ஏப்ரல் 29 ஆம் திகதி 404 கிராம் 600 மில்லி கிராம் ஹெரோயினுடன் கைது செய்யப்பட்ட டீன் அல்லா என்ற குற்றவாளிக்கு  540/2019 என்ற எண்ணிலும் வழக்கு தொடரப்பட்டிருந்தது.

அதேவேளை 2017 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 27 ஆம் திபதி 367 கிராம் ஹெரோயினுடன் கைது செய்யப்பட்ட  மொஹம்மட் அஸ்லாம் என்பவருக்கு 557/2019 என்ற இலக்கத்திலும் , அதே வருடம் நவம்பர் மாதம் முதலாம் திகதி 2 கிலோ 766 கிராம் ஹெரோயினுடன் கைது செய்யப்படட மலிக் அட்னா அஃப்சல் சைரா கான் என்னும் குற்றவாளிக்கு 539/ 2019 எனும் இலக்கத்திலும் வழக்கு தொடரப்பட்டிருந்தது.

குறித்த குற்றவாளிகளுக்கு  எதிராக ஹெரோயினை இந்நாட்டுக்கு எடுத்து வந்தமை மற்றும் வைத்திருந்தமை, கடத்தலில் ஈடுப்பட்டமை ஆகிய குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளன.

இந் நிலையில் குற்றவாளிகளுக்கு  எதிராக நீர்கொழும்பு நீதிவான் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டு விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வந்ததுடன் , சந்தேக நபர்கள் தமது குற்றத்தை மன்றில் ஏற்றுக் கொண்டதை அடுத்து நீதவான் அவர்களுக்கு ஆயுள் தண்டனையை விதித்துள்ளதாக பொலிஸ் தலைமையகம் மேலும் தெரிவித்தது.

அதேவேளை கடந்த 12 ஆம் திகதியும் இவ்வாறு போதைப்பொருள் கடத்தலில் ஈடுப்பட்டதாக கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த பாக்கிஸ்தான் நாட்டைச்சேர்ந்த பெண்ணொருவர் உட்பட 7 பேருக்கு இவ்வாறு நீர்கொழும்பு நீதவான் நீதிமன்றம் ஆயுள் தண்டனை விதித்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.