காலநிலை மாற்றத்தை கட்டுப்படுத்துமாறு கோரி அவுஸ்திரேலியாவின் பல பகுதிகளில் இடம்பெற்ற ஆர்ப்பாட்டங்களில் மூன்று இலட்சத்திற்கும் அதிகமான மக்கள் கலந்துகொண்டுள்ளனர்.

நியுயோர்க்கில் ஐக்கியநாடுகளின் காலநிலை மாற்றம் குறித்த மாநாடு எதிர்வரும் 23 ம் திகதி ஆரம்பமாவுள்ள நிலையில் காலநிலை மாற்றத்தை கட்டுப்படுத்தவேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தி பல உலகநாடுகளில் ஆர்ப்பாட்டங்கள் பேரணிகள் இடம்பெறுகின்றன.

அவுஸ்திரேலியாவின் எட்டு முக்கிய நகரங்களிலும் ஏனைய இடங்களிலும் இடம்பெற்றுள்ள ஆர்ப்பாட்டங்களில் மூன்று இலட்சத்திற்கும் அதிகமான மக்கள் கலந்துகொண்டுள்ளனர் என ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்.

சுமார் 2500ற்கும் அதிகமான அவுஸ்திரேலிய வர்த்தகர்கள் தங்கள் வர்த்தக நடவடிக்கைகளை நிறுத்தி இந்த ஆர்ப்பாட்ட பேரணிகளிற்கு ஆதரவு வழங்கியுள்ளனர்.

மேலும் தங்கள் பணியாளர்களிற்கு விடுப்பினை வழங்கியுள்ளனர்.

காலநிலை குறித்த ஆர்ப்பாட்டங்கள் காரணமாக மெல்பேர்ன் சிட்னி பிரிஸ்பேர்ன் போன்ற நகரங்கள் மத்திய பகுதிகள் செயலிழந்துள்ளன.

மெல்பேர்னில் ஆர்ப்பாட்டங்களை ஏற்பாடு செய்தவர்கள் சுமார் 150,000ற்கும் அதிகமானவர்கள் கலந்துகொண்டனர் என தெரிவித்துள்ளனர்.

சிட்னியில் 80,000 பேரும்,பிரிஸ்பேர்னில் 35,000 பேரும் கலந்துகொண்டனர் என ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்.

ஆர்ப்பாட்டத்தில்  கலந்துகொண்ட பத்து வயது மாணவன் பார்க்கர் ரென்சோ நான் எனது எதிர்காலம் குறித்து அச்சமடைந்துள்ளேன் என தெரிவித்துள்ளான்.

நான் பாடசாலைக்கு செல்லவேவிரும்புகின்றேன் ஆனால் இது அங்கிருப்பதற்கான தருணமல்ல அரசாங்கம் எங்களை இங்கு வரச்செய்துள்ளது என மாணவன் தெரிவித்துள்ளான்.

எனது கல்வி முக்கியம் அதனை விட உலகம் முக்கியம் என அந்த மாணவன் தெரிவித்துள்ளான்.

நாங்கள் இதனை நிறுத்தவேண்டும் என்பதால் நான் இங்கு வந்துள்ளேன் என அடிலெய்ட் பேரணியில் கலந்துகொண்ட மாணவன் ஒருவன் தெரிவித்துள்ளான்.

காலநிலைமாற்றம் மிக வேகமாக இடம்பெறுகின்றது நாங்கள் அதனை சரிசெய்யாவிட்டால் எவரும் அதனை செய்யமாட்டார்கள் என அவர் குறிப்பிட்டுள்ளார்.