அவன்கார்ட் நிறுவனத்துக்கு மிதக்கும் ஆயுத களஞ்சியத்தை முன்னெடுத்து செல்ல அனுமதியளித்ததன் ஊடாக அரசாங்கத்துக்கு 1140 கோடி ரூபா நட்டதை ஏற்படுத்தியதாக இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழு, பாதுகாப்பு அமைச்சின் முன்னாள் செயலர் கோத்தாபய ராஜபக்ஷ உள்ளிட்ட 8 பேருக்கு எதிராக கொழும்பு பிரதான நீதிவான் முன்னிலையில் தாக்கல் செய்த வழக்கு எதிர்வரும் 23 ஆம் திகதி திங்கட்கிழமை வரை ஒத்தி வைக்கப்ப்ட்டுள்ளது. 

இன்று குறித்த வழக்கு கொழும்பு மேலதிக நீதிவான் தனுஜா ஜயதுங்க  முன்னிலையில் விசாரணைக்கு வந்தது.

இதன்போது, கடந்த 12 ஆம் திகதி மேன் முறையீட்டு நீதிமன்றமானது, நீதிவான் நீதிமன்றில் தொடரப்பட்டுள்ள இந்த வழக்கு குறைபாடுடையதாக மேன் முறையீட்டு நீதிமன்றம் தீர்மானித்து விடுவிக்க உத்தர்விட்டுள்ளதால் கோத்தாபய உள்ளிட்ட ளிட்ட சந்தேக நபர்களை வழக்கிலிருந்து விடுவிக்குமாறு, அவர்களின் சட்டத்தரணிகள் கோரினர்.

எனினும் மேன் முறையீட்டு நீதிமன்றின் குறித்த தீர்ப்பின் பிரதி, நீதிவான் நீதிமன்ருக்கு கிடைக்கவில்லை என சுட்டிக்காட்டிய மேலதிக நீதிவான் தனுஜா ஜயதுங்க, வழக்கை எதிர்வரும் 23 ஆம் திகதிக்கு ஒத்தி வைத்ததுடன், மேன் முறையீட்டு நீதிமன்றின் தீர்ப்பின் பிரதியைப் பெற்றுக்கொள்ள நடவடிக்கை எடுக்குமாறு கொழும்பு பிரதான நீதிவான் நீதிமன்றின் பதிவாளருக்கு ஆலோசனை வழங்கினார்.

அவன்கார்ட் நிறுவனத்துக்கு மிதக்கும் ஆயுத களஞ்சியத்தை முன்னெடுத்து செல்ல அனுமதியளித்ததன் ஊடாக அரசாங்கத்துக்கு 1,140 கோடி ரூபா நட்டதை ஏற்படுத்தியதாக இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழு தாக்கல் செய்துள்ள வழக்கை ஆட்சேபித்து கோத்தபாய ராஜபக்ஷ தாக்கல் செய்துள்ள மனுவின் கோரிக்கைகளை ஏற்றுக்கொண்டுள்ள மேன்முறையீட்டு நீதிமன்றம், அவ் வழக்கில் குற்றம் சுமத்தப்பட்டுள்ள கோத்தபாய ராஜபக்ஷ உள்ளிட்ட 8 பேரையும் விடுவிக்க கொழும்பு பிரதான நீதிவான் நீதிமன்றுக்கு  உத்தரவிடப்பட்டது.

மேன் முறையீட்டு நீதிமன்றின் நீதிபதிகளான அச்சல வெங்கப்புலி மற்றும் அர்ஜுன ஒபேசேகர ஆகியோர் அடங்கிய நீதிபதிகள் குழாமே  இந்த உத்தரவைப் பிறப்பித்தது.

அவன்கார்ட் வழக்கில் இருந்து முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ உள்ளிட்ட 8 பேர் விடுதலை செய்யப்பட்டதாக மேன்முறையீட்டு நீதிமன்றம் செப்டெம்பர் மாதம் 12 ஆம் திகதி தீர்ப்பு வழங்கிய நிலையில், அது தொடர்பான ஆவணங்கள் இதுவரை கிடைக்கப்பெறவில்லை எனவும் அதனால் வழக்கு செப்டெம்பர் மாதம் 23 ஆம் திகதி வரை ஒத்திவைக்கப்படுவதாகவும் நீதிமன்றம் அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.