மகேந்திர சிங் தோனியின் காலம் முடிவடைந்து விட்டதாக தெரிவித்துள்ள இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர் சுனில் கவாஸ்கர், அவருக்கு அடுத்ததாக இருக்கும் ரிஷாத் பந்தின் வளர்ச்சி மீது அதிக அக்கறை செலுத்த வேண்டும் என்றும் கூறியுள்ளார்.

உலகக் கிண்ண போட்டிக்கு முன்பாக தோனியின் துடுப்பாட்டம் மீது பல்வேறு விமர்சனங்கள் எழுந்தன. உலகக் கிண்ண போட்டியில் ஆப்கானிஸ்தான், இங்கிலாந்து அணிகளுக்கு எதிராக ஆடிய அவரின் துடுப்பாட்டம் கடுமையாக விமர்சிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து, மேற்கிந்தியத் தீவுகள் தொடரில் இடம் பெறாமல் தோனி தானாகவே விலகிக்கொண்டார்.

இந்தியா, தென்னாப்பிரிக்கா இடையே நடந்துவரும் இருபதுக்கு 20 தொடரிலும் தோனியின் பெயர் பரிசீலிக்கப்படவில்லை. இதனால் தோனியின் காலம் இந்திய அணியில் முடிவுக்கு வருகிறதோ என்ற சந்தேகம் எழுந்துள்ளது. 

இந் நிலையில் இது தொடர்பில் கருத்து தெரிவித்த சுனில் கவாஸ்கர்,

தோனியின் காலம் முடிந்துவிட்டது. இனிமேல் தோனிக்கு அடுத்த இடத்தில் யாரைக் கொண்டுவருவது குறித்து நாம் ஆலோசிக்க வேண்டும். என்னுடைய கருத்து அடுத்த ஆண்டு நடக்கும் இருபதுக்கு 20 உலக கிண்ண போட்டிக்கு ரிஷப் பந்தை தயார் செய்ய வேண்டும்.

ரிஷப் பந்த் தனக்கு கிடைக்கும் வாய்ப்புகளை பயன்படுத்திக் கொள்வார் என்று நம்புகிறேன். அவருக்கே என்னுடைய முன்னுரிமை இருக்கும்.

அடுத்து நடக்கும் பங்களாதேஷுக்கு எதிரான தொடரில் கூட தோனியைத் தேர்வு செய்யக்கூடாது என்பது என்னுடைய கருத்து. அவருகுப் பதிலாக ரிஷப் பந்துக்கு வாய்ப்பளிக்கலாம்.

ஒருவேளை ரிஷப் பந்த் தனக்குக் கிடைத்த வாய்ப்பை சரியாகப் பயன்படுத்திக்கொள்ளத் தவறும்பட்சத்தில் அவருக்குப் பதிலாக சஞ்சு சாம்ஸனைத் தேர்வு செய்யலாம். சஞ்சு சாம்ஸன் சிறந்த விக்கெட் கீப்பர், பேட்ஸ்மேன் என்றார்.