மட்டக்களப்பு, வாழைச்சேனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பெருவெட்டை வயல் பிரதேசத்தில் நேற்று வியாழக்கிழமை மாலை இடி மின்னல் தாக்கத்திற்கு இலக்காகி குடும்பஸ்த்தர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

மட்டக்களப்பு - வாழைச்சேனை -  மீராவோடையைச் சேர்ந்த 40 வயதான முகம்மது அச்சு முகம்மது ரம்ழான் என்ற நபரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

தற்போது பெரும்போக வேளாண்மை செய்கைக்கான ஆரம்ப வேலைகள் இப்பிரதேசத்தில் இடம்பெற்றுவருவதால் தமது வயலில் உழவு வேலையில் ஈடுபட்ட உழவு இயந்திர சாரதிக்கு உணவு வழங்கச் சென்றபோது குறித்த அனர்த்தம் ஏற்பட்டுள்ளது.

இவ்வாறு மின்னல் தாக்கத்திற்குள்ளாகி உயிரிழந்தவர்இரு பிள்ளைகளின் தந்தை என பொலிஸார் தெரிவித்துள்ளனர். 

இந்நிலையில் குறித்த நபரின் சடலம் வாழைச்சேனை ஆதார வைத்தியசாலையில் வைக்கப்பட்டு பிரேத பரிசோதனையின் பின்னர் உறவினர்களிடம் கையளிக்கப்பட்டது.

சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.