நாட்டின்  7ஆவது ஜனா­தி­பதி தேர்தல் நவம்பர் மாதம் 16ஆம் திகதி நடை­பெறும் என்றும்  தேர்­த­லுக்­கான வேட்­பு­ம­னுக்கள்  ஒக்­டோபர் மாதம் 7ஆம் திகதி காலை 9 மணி­ முதல் முற்­பகல் 11 மணி­வ­ரையில்  ஏற்­றுக்­கொள்­ளப்­படும் என்றும்  தேர்­தல்கள் ஆணைக்­குழு  அறி­வித்­தி­ருக்­கின்­றது.

தேர்­தலில் போட்­டி­யிடும் வேட்­பா­ளர்கள் நேற்று வியா­ழக்­கி­ழமை முதல் ஒக்­டோபர் மாதம் 6ஆம் திகதி நண்­பகல் 12 மணி­வரை தமது கட்­டுப்­ப­ணத்தை செலுத்த முடியும் என்றும் தபால் மூல  வாக்­க­ளிப்­புக்­கான விண்­ணப்­பங்கள் செப்­டெம்பர் 30 ஆம்­தி­கதி வரை ஏற்­றுக்­கொள்­ளப்­படும் எனவும் ஆணைக்­குழு தெரி­வித்­தி­ருக்­கின்­றது.  ஜனா­தி­பதி தேர்­த­லுக்­கான அறி­விப்பு குறித்த வர்த்­த­மானி நேற்று முன்­தினம் நள்­ளி­ரவு  வெளி­யி­டப்­பட்­டி­ருக்­கின்­றது.

ஜனா­தி­பதி  தேர்தல் டிசம்பர் மாதம் 8ஆம் திக­திக்கு முன்னர் நடை­பெறும் என்று எதிர்­வு­கூ­றப்­பட்­டி­ருந்­தது.  ஆனாலும்  தற்­போது தேர்­தல்கள் ஆணைக்­குழு  உத்­தி­யோ­க­பூர்­வ­மாக தேர்­த­லுக்­கான தினத்­தையும் வேட்­பு­மனு  தாக்­க­லுக்­கான திக­தி­யையும்  அறி­வித்­தி­ருக்­கின்­றது.  தேர்­த­லுக்­கான  உத்­தி­யோ­க­பூர்வ அறி­விப்பு  வெளி­யி­டப்­பட்­டி­ருக்­கின்­ற­மை­யினால்  பிர­தான அர­சியல் கட்­சிகள்  தேர்­த­லுக்­கான ஆயத்­தங்­களில் மும்­மு­ர­மாக ஈடு­பட்­டுள்­ளன.  

இது­வ­ரையில்  பிர­தான அர­சியல் கட்­சி­களின் வேட்­பா­ளர்கள் உட்­பட 17 பேர்  ஜனா­தி­பதி தேர்­தலில் போட்­டி­யி­டு­வ­தற்­கான அறி­விப்­பினை  தேர்தல் திணைக்­க­ளத்தில் செய்­துள்­ளனர்.  இத­னை­வி­டவும் மேலும் வேட்­பா­ளர்கள் போட்­டி­யி­டக்­கூ­டிய சூழ்­நி­லையும் ஏற்­ப­டலாம்.  பிர­தான அர­சியல் கட்­சி­களில் ஆளும் ஐக்­கிய தேசி­யக்­கட்சி இன்­னமும்  ஜனா­தி­பதி வேட்­பாளர் தொடர்­பான அறி­விப்­பினை வெளி­யி­ட­வில்லை.  கட்­சியின் தலை­வரும் பிர­த­ம­ரு­மான ரணில் விக்­கி­ர­ம­சிங்­கவை வேட்­பா­ள­ராக நிய­மிக்­க­வேண்டும் என்று ஒரு தரப்பும்,  பிர­தித்­த­லை­வரும் அமைச்­ச­ரு­மான சஜித் பிரே­ம­தா­ஸவை  நிய­மிக்­க­வேண்­டு­மென மற்­றொரு தரப்பும் கோரி வரு­கின்­றன. இத­னை­விட  நிறை­வேற்று அதி­கார முறை­மை­யினை ஒழிப்­ப­தற்­காக அனை­வரும் ஒத்­து­ழைத்தால் தான் தேர்­தலில் கள­மி­றங்க தயா­ராக இருப்­ப­தாக  சபா­நா­ய­கரும் ஐக்­கிய தேசி­யக்­கட்­சியின் முக்­கி­யஸ்­த­ரு­மான கரு ஜய­சூ­ரி­யவும் அறி­வித்­தி­ருக்­கின்றார்.

இவ்­வா­றான நிலையில் வேட்­பாளர் தெரிவு தொடர்பில் ஐக்­கிய தேசி­யக்­கட்­சிக்குள் முரண்­பாடு நீடித்து வரு­கி­றது.  முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜ­பக் ஷ தலை­மை­யி­லான பொது­ஜன பெர­மு­னவின் சார்பில் முன்னாள் பாது­காப்பு செய­லாளர் கோத்­த­பாய ராஜ­பக் ஷ  வேட்­பா­ள­ராக அறி­விக்­கப்­பட்­டி­ருக்­கின்றார். இதே­போன்றே ஜே.வி.பி.யின் சார்பில் அதன் தலைவர் அனு­ர­கு­மார திஸா­நா­யக்க வேட்­பா­ள­ராக  போட்­டி­யி­டுவார் என்று  அறி­விக்­கப்­பட்­டுள்­ளது.  ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன தலை­மை­யி­லான சிறி­லங்கா சுதந்­தி­ரக்­கட்­சியும் தேர்­தலில் போட்­டி­யி­டு­வதா? இல்­லையா என்­பது தொடர்பில் இறு­தி­யான முடி­வினை இன்­னமும் எடுக்­க­வில்லை.

பொது­ஜன பெர­மு­ன­வுடன் சிறி­லங்கா சுதந்­தி­ரக்­கட்சி பேச்­சுக்­களை நடத்தி வரு­கின்­றது. ஒன்­றி­ணைந்து போட்­டி­யி­டு­வது தொடர்பில்  பேச்­சு­வார்த்­தைகள் இடம்­பெ­று­கின்ற போதிலும் எந்த சின்­னத்தில் போட்­டி­யி­டு­வது என்ற விட­யத்தில் இழு­பறி நிலைமை காணப்­படு­கின்­றது.  போட்­டி­யிடும் சின்­னத்தில் இணக்­கப்­பாடு ஏற்­ப­டா­விட்டால் சிறி­லங்கா சுதந்­தி­ரக்­கட்­சியும் ஜனா­தி­பதி தேர்­தலில் வேட்­பாளர் ஒரு­வரை கள­மி­றக்­க­வுள்­ளது.

இவ்­வாறு  நான்கு பிர­தான கட்­சி­களும்  வேட்­பா­ளர்­களை கள­மி­றக்­கினால்  நான்­கு­மு­னைப்­போட்­டி­யாக  இந்தத் தேர்தல் அமையும் என்று எதிர்­பார்க்­கலாம்.  தற்­போ­தைய நிலையில் தேர்­த­லுக்­கான அறி­விப்பு உத்­தி­யோ­க­பூர்­வ­மாக வெளி­யி­டப்­பட்­டி­ருக்­கி­றது.  உரிய காலத்தில் ஜனா­தி­பதி தேர்­தலை நடத்தி மக்­களின் வாக்­கு­ரி­மை­யினை உறு­தி­செய்­வ­தற்கு நட­வ­டிக்கை எடுக்­கப்­பட்­டுள்­ளமை வர­வேற்­கத்­தக்க செயற்­பா­டாகும்.

ஆனால்  தேர்­த­லா­னது சுதந்­தி­ர­மா­கவும்  நீதி­யா­கவும் வன்­மு­றைகள் இன்­றியும் நடை­பெ­ற­வேண்­டி­யது  அவ­சி­ய­மா­க­வுள்­ளது.  மக்­களின்  ஜன­நா­யக உரி­மைகள் பாது­காக்­கப்­பட்டு  அவர்­களின் விருப்­புக்­கேற்ப  ஜனா­தி­பதி தெரி­வு­செய்­யப்­ப­ட­வேண்­டு­மானால் தேர்தல் நீதி நியா­ய­மா­ன­தாக நடத்­தப்­ப­ட­வேண்­டி­யது அவ­சி­ய­மாகும். எனவே இதற்­கான நட­வ­டிக்­கை­களை எடுப்­ப­தற்கு தேர்­தல்கள் ஆணைக்­குழு தீவி­ர­மாக  செயற்­ப­ட­வேண்­டி­யுள்­ளது.

கடந்த காலங்­களில் தேர்­தல்கள்  வன்­முறை மிக்­க­தாக இடம்­பெற்­றி­ருந்­தமை  வர­லாற்றில் கறை­ப­டிந்த நினை­வு­க­ளாக உள்­ளன. பாரா­ளு­மன்றத் தேர்­த­லாக இருக்­கலாம். மாகா­ண­சபைத் தேர்­த­லாக இருக்­கலாம்,  ஜனா­தி­பதி தேர்­த­லாக இருக்­கலாம் கடந்த காலங்­களில் வன்­மு­றைகள் தலை­தூக்­கி­யி­ருந்­தன.  முன்னாள் ஜனா­தி­பதி சந்­தி­ரிகா குமா­ர­துங்­கவின் ஆட்­சிக்­கா­லத்தில்  இடம்­பெற்ற மாகா­ண­சபை மற்றும்  பாரா­ளு­மன்ற தேர்­தல்­களில் பெரும் வன்­மு­றைகள் தலை­தூக்­கி­யி­ருந்­தன.  இதே­போன்றே  முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜ­ப­க் ஷவின் ஆட்­சிக்­கா­லத்­திலும்  வன்­மு­றைகள் இடம்­பெற்­றி­ருந்­தன.  

தென்­ப­கு­தியில்  ஜே.வி.பி.  கிளர்ச்சி இடம்­பெற்­றி­ருந்த காலப்­ப­கு­தியில் தேர்­தல்­களை சுதந்­தி­ர­மாக நடத்த முடி­யாத நிலைமை காணப்­பட்­டி­ருந்­தது.  அதே­போன்றே வடக்கு, கிழக்கில் விடு­த­லைப்­பு­லிகள் பலம்­பெற்­றி­ருந்த நிலையில் அவர்­களின்  ஒத்­து­ழைப்­பு­ட­னேயே தேர்­தலை நடத்­த­வேண்­டிய சூழ்­நிலையும்  காணப்­பட்டு வந்­தது.  அந்­தக்­காலப்­ப­கு­தியில் தென்­ப­குதி கட்­சி­க­ளுக்­கி­டையே ஏற்­பட்ட முரண்­பா­டுகள் கார­ண­மா­கவும் வன்­முறைகள்  தலை­தூக்­கி­யி­ருந்­தன.

முன்னாள் ஜனா­தி­பதி சந்­தி­ரிகா குமா­ர­துங்­கவின் ஆட்­சிக்­கா­லத்தில் இடம்­பெற்ற பாரா­ளு­மன்றத் தேர்­தலின் போது கண்டி உட­த­ல­வின்­னவில் இடம்­பெற்ற துப்­பாக்கிச்சூட்டில் 11 முஸ்லிம்  இளை­ஞர்கள் படு­கொலை செய்­யப்­பட்­டி­ருந்­தனர்.  இதே­போன்றே  முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜபக்ஷவின் ஆட்­சிக்­கா­லத்தில் இடம்­பெற்ற உள்­ளூ­ராட்சி தேர்­தலின் போது ஐக்­கிய மக்கள் சுதந்­திர முன்­ன­ணியைச் சேர்ந்த  இரு­த­ரப்­பி­ன­ருக்­கி­டையே இடம்­பெற்ற துப்­பாக்­கிச்­சூட்டில்  பாரத லக் ஷ்மன் பிரே­மச்­சந்­திர உட்­பட சிலர் பலி­யா­கி­யி­ருந்­தனர். இவ்­வாறு ஜன­நா­யக ரீதி­யி­லான தேர்­தல்­களின் போது வன்­மு­றைகள் தலை­தூக்கி பல உயிர்­களை பலி­யெ­டுத்த வர­லாறு எமது நாட்டில் காணப்­ப­டு­கின்­றது.

வடக்கு, கிழக்­கிலும்  இத்­த­கைய வன்­மு­றைகள் அர­சியல் கட்­சி­க­ளுக்கு மத்­தியில் ஏற்­பட்­டி­ருந்­த­மை­யினால் பல உயிர்கள் பலி­யா­கி­ய­துடன்  பெரு­ம­ள­வானோர் காய­ம­டையும்  நிலையும் ஏற்­பட்­டி­ருந்­தது.  ஆனால் தற்­போ­தைய சூழ்­நி­லையில்  அத்­த­கைய வன்­மு­றைகள்  குறை­வ­டைந்­துள்­ளதை காணக்­கூ­டி­ய­தாக  உள்­ளது.  தேர்­தல்­களின் போது வன்­மு­றைகள் அறவே இடம்­பெ­றக்­கூ­டாது. அதற்­கேற்­ற­வ­கையில்  அர­சியல் கட்­சிகள் தமது  ஆத­ர­வா­ளர்கள் மத்­தியில்  பரப்­பு­ரை­களை செய்­ய­வேண்­டி­யது  அவ­சி­ய­மா­கி­யுள்­ளது.

தற்­போது  ஜனா­தி­பதி தேர்­த­லுக்­கான அறி­விப்பு வெளி­யி­டப்­பட்­டுள்ள நிலையில் நீதி­யா­னதும்  சுதந்­தி­ர­மா­ன­து­மான தேர்­தலை  உறு­திப்­ப­டுத்­து­வ­தற்கு  தேர்­தல்கள் ஆணைக்­குழு நட­வ­டிக்கை எடுப்­ப­துடன் அர­சியல் கட்­சிகள்  முழு­மை­யாக அதற்கு ஒத்­து­ழைப்பு  வழங்­க­வேண்­டி­யது இன்­றி­ய­மை­யா­த­தாக உள்­ளது.  நீதி நியா­ய­மான தேர்­தலை உறு­திப்­ப­டுத்தும் வகையில் சுயா­தீ­ன­மான உள்ளூர் மற்றும் வெளி­நாட்டு கண்­கா­ணிப்­பா­ளர்­களை நிய­மிப்­ப­தற்கும்  தேர்­தல்கள் ஆணைக்­குழு  நட­வ­டிக்­கை­களை எடுக்­க­வேண்­டி­யுள்­ளது.

2015 ஆம் ஆண்டு இடம்­பெற்ற ஜனா­தி­பதி தேர்­தலில் வன்­முறைகள் தலை­தூக்­கலாம் என்ற அச்சம்  மேலெ­ழுந்­தி­ருந்­தது. பொது எதி­ர­ணியின் வேட்­பா­ள­ராக  சிறி­லங்கா சுதந்­தி­ரக்­கட்­சியின் செய­லா­ள­ராக இருந்த மைத்­தி­ரி­பால சிறி­சேன போட்­டி­யிட்­ட­தை­ய­டுத்து  இத்­த­கைய நிலைமை உரு­வா­கலாம் என்ற அச்சம் மேலெ­ழுந்­தி­ருந்­தது.  ஜனா­தி­பதி  தேர்­தலின் இறு­திப்­பி­ர­சா­ரக்­கூட்டம்  கொழும்பு பஞ்­சி­கா­வத்­தையில் நடை­பெற்­ற­போது அந்­தக்­கூட்­டத்­திற்கு பொது எதி­ர­ணியின் வேட்­பாளர் செல்­வ­தற்கு பெரும் அச்சப்பட்ட நிலைமை அன்று இருந்தது.  

இதேபோன்றே 2010 ஆம் ஆண்டு இடம்பெற்ற ஜனாதிபதி தேர்தலின்போதும் எதிரணியின் வேட்பாளராக முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகா போட்டியிட்டிருந்தார். அப்போதும்  வன்முறைகள் தலைதூக்கியிருந்தன.  தேர்தலை அடுத்து சரத் பொன்சேகா  கைதுசெய்யப்பட்டு அரசியல் பழிவாங்கல்களுக்கும் உள்ளாக்கப்பட்டிருந்தார்.

ஜனநாயக  தேர்தல் முறையின்கீழ்  தேர்தலில் வெற்றி தோல்வி என்பது சகஜமானது. அதனை  ஏற்றுக்கொள்ளும் பக்குவம் அரசியல் கட்சிகளின் தலைமைகளுக்கு இருக்கவேண்டும். மக்கள்  ஜனநாயக விழுமியங்களுக்கு  ஏற்ப தமது வாக்குகளைப் பயன்படுத்தி தமக்கான பிரதிநிதிகளை தெரிவு செய்கின்றபோது அதற்கு  உரிய இடம் வழங்கப்படவேண்டும்.  இதனைவிடுத்து வன்முறைகளை கட்டவிழ்த்து விடுவதோ,  நீதி, நியாயமற்ற முறையில் செயற்படுவதையோ  அரசியல் கட்சிகளின் தலைமைகள் தவிர்த்துக்கொள்ளவேண்டும்.  

தற்போதைய நிலையில் நீதி நியாயமாகவோ சுதந்திரமாகவோ ஜனாதிபதி தேர்தலை நடத்தி பெரும்பான்மையான மக்கள் விரும்பும் நாட்டின்  தலைவரை தெரிவு செய்வதற்கு சகல தரப்பும் ஒத்துழைக்கவேண்டியது அவசியம் என்பதை வலியுறுத்த விரும்பு கின்றோம்.