ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் வாக்குமூலம் பெறுவதற்காக ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல் தொடர்பில் ஆராயும் பாராளுமன்ற தெரிவுக்குழுவினர் இன்று காலை ஜனாதிபதி செயலகத்திற்கு சென்றுள்னர்.

இறுதி சாட்சியாளரான  ஜனாதிபதியிடம் வாக்குமூலம் பெற்றபின்னர் தெரிவுக்குழு அறிக்கையை நிறைவு செய்ய தீர்மானம் எடுத்துள்ளது. 

கடந்த ஏப்ரல் மாதம் இடம்பெற்ற ஈஸ்டர் தாக்குதல் குறித்து விசாரணை நடத்தி பாராளுமன்றத்திற்கு அறிக்கை சமர்பிக்க சபாநாயகர் கரு ஜெயசூரியவினால் நியமிக்கப்பட்ட விசேட பாராளுமன்ற தெரிவுக்குழு கடந்த மே மாதம் 22 ஆம் திகதி தொடக்கம் தமது விசாரணைகளை முன்னெடுத்து வந்துள்ள நிலையில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் மாத்திரம்  தமது வாக்குமூலத்தை பெற்றுக்கொள்ள வேண்டியுள்ளது. 

கடந்த மாதம் அதற்கான அறிவிப்பை விடுத்த போதிலும் ஜனாதிபதி தெரிவிக்குழு முன்னிலையில் பிரசன்னமாக மறுப்பு தெரிவித்திருந்தார். 

பின்னர் தெரிவுக்குழுவின்  தலைவர் பிரதி சபாநாயகர் ஆனந்த குமாரசிறி எழுத்துமூல அறிவிப்பை ஜனாதிபதிக்கு விடுத்ததை அடுத்து தான் தெரிவுக்குழு முன்னிலையில் ஆஜராக இணக்கம் தெரிவிப்பதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன எழுத்துமூல அறிவிப்பை விடுத்திருந்தார். 

இந்நிலையில் இன்றைய தினம் காலை 10 மணிக்கு ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ இல்லத்தில் இந்த வாக்குமூலம் பெற்றுக்கொள்ள பாராளுமன்ற தெரிவுக்குழு செல்லவுள்ளனர். இந்த சந்திப்பில் ஊடகங்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளதுடன் ஜனாதிபதி காரியாலையம் மூலமாக ஒரு சில தகவல்கள் மாத்திரம் வெளியிடப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இந்நிலையில் பாராளுமன்ற விசேட தெரிவுக்குழு உறுப்பினர்கள் நேற்று பிற்பகல் பாராளுமன்ற கட்டட தொகுதியில் கூடியிருந்தனர், இன்று ஜனாதிபதியை சந்திக்கவுள்ள நிலையில் எவ்வாறான நடவடிக்கைகளை கையாள்வது என்ற முன்னாயத்தன்களை எடுக்க கூடியதாக தெரிவுக்குழு உறுப்பினர் தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.எ.சுமந்திரன் தெரிவித்தார். 

அவர் கூறியதானது :- ஜனாதிபதி நாளைய தினம் (இன்று ) தெரிவுக்குழுவை சந்திக்க இணக்கம் தெரிவுத்துள்ள நிலையில் அவரிடம் கேட்க வேண்டிய கேள்விகள், மற்றும் முன்னாயத்த நடவடிக்கைகள் குறித்தும் அறிக்கையை முழுமைப்படுத்த முன்னெடுக்க வேண்டிய வேலைத்திட்டம் ஆகியன குறித்து கலந்துரையாடியதாக உறுதிப்படுத்தினார். 

இந்நிலையில் இன்றிய தினம் பாதுகாப்பு அமைச்சர் என்ற வகையில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் பெற்றுக்கொள்ளும் வாக்குமூலத்தின் பின்னர் அறிக்கையை முழுமைப்படுத்தி பாராளுமன்றத்தில் சமர்பிக்க நடவடிக்கை எடுக்கப்படும். அடுத்த மாதம் (ஒக்டோபர் ) 31 ஆம் திகதி வரையில் தெரிவுக்குழு இயங்குவதற்கான கால எல்லை பாராளுமன்ற அங்கீகாரத்துடன் நீட்டிக்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.