இலங்கை மன்னார் கடற்பரப்புக்குள் இந்திய நாட்டுப்படகுகளில் அத்துமீறி நுழைந்து இங்கு மீன்பிடியில் ஈடுபட்டதாக குற்றம் சுமத்தப்பட்ட நிலையில் கைது செய்யப்பட்டு மன்னார் நீதிமன்றில் ஆஐர்படுத்தப்பட்டிருந்த சிறுவர் பராமரிப்பு நிலையத்திலும் விளக்க மறியலிலும் வைக்கப்பட்டிருந்த சிறுவன் உட்பட 21 இந்திய மீனவர்களுக்கும் மன்னார் நீதிமன்றம் இன்று விடுதலை செய்தது.

கடந்த 26.04.2016 இரவு மூன்று இந்திய நாட்டுப் படகுகளில் (வத்தைகளில்) ஒரு சிறுவன் உட்பட 21 இந்திய மீனவர்கள் இலங்கை மன்னார் கடற்பரப்புக்குள் அத்துமீறி நுழைந்து மீன்பிடியில் ஈடுபட்டபொழுது இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டு மன்னார் மாவட்ட கடற்தொழில் திணைக்கள அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டிருந்தனர்.

குறித்த 21 இந்திய மீனவர்களையும் மன்னார் மாவட்ட கடற்தொழில் திணைக்கள அதிகாரிகளால் 27.04.2016 அன்று மன்னார் நீதவான் நீதிமன்றத்தில் ஆஐர்படுத்தப்பட்டு மூன்று படகு மீனவர்களுக்கு எதிராகவும் தனித்தனி வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டிருந்த நிலையில் இவர்களுடன் இருந்த சிறுவனை அன்னை இல்லத்திலும் ஏனையோரை விளக்க மறியலிலும் வைக்கும்படி மன்னார் நீதிமன்றம் கட்டளை பிறப்பித்திருந்தது.

இவர்களை மீண்டும் கடந்த 11.05.2016 அன்று மன்றில் விசாரனைக்காக மன்னார் நீதிமன்றில் ஆஐர்படுத்தியிருந்தபோது, தொடர்ந்து எதிர்வரும் 25.05.2016 வரை  விளக்கமறியலிலும் 16 வயது சிறுவனை மன்னாரில் இயங்கிவரும் அன்னை இல்லத்திலும்; வைக்கும்படியும் நீதவான் கட்டளைப் பிறப்பித்திருந்த இந்தநிலையில் சட்டமா அதிபரின் ஆலோசனைக்கு அமைய இவர்கள் 21 பேரையும் இன்று மன்னார் நீதிமன்றில் ஆஐர்படுத்தியதைத் தொடர்ந்து இவர்கள் விடுவிக்கப்பட்டுள்ளனர். இவர்களிடம் கைப்பற்றப்பட்ட மீன்பிடி உபகரணங்கள் விடுவிக்கப்படாது தடுத்து வைக்கப்பட்டுள்ளன.

இவ் இந்திய மீனவர்கள் விடுவிக்கும்போது இலங்கைக்கான யாழ் இந்திய துணை தூதரக அதிகாரிகள் மன்றுக்கு வருகை தருவதற்கு காலதாமதம் ஏற்பட்டதால் இவ் இந்திய மீனவர்களை மன்னார் கடற்தொழில் திணைக்கள அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டு இவர்கள் யாழ் இந்திய துணை தூதரக அதிகாரிகள் மூலம் கடற்படையினர் ஊடாக கடல் மார்க்கமாக அனுப்பி வைப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. 

இவர்கள் இலங்கை கடற்பரப்புக்குள் அத்துமீறி நுழைந்து இங்கு தடைசெய்யப்பட்ட தங்கூசி வலைகளைக் கொண்டு மீன்பிடியில் ஈடுபட்டதாகக் தெரிவித்தே இவர்களுக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யப்பட்டிருந்ததும் இங்கு குறிப்பிடத்தக்கது

(வாஸ் கூஞ்ஞ)