(இரா.செல்வராஜா)

நாடளாவிய ரீதியில் இலங்கை போக்குவரத்து சபையின் ஊழியர்கள் கடந்த சில தினங்களாக மேற்கொண்டு வந்த வேலை நிறுத்தம் இன்று காலை கைவிடப்பட்டது.

நாடு முழுவதிலும் உள்ள  80 டிப்போக்களின் ஊழியர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுப்பட்டு வந்தனர். இதனால் வெளி ஊர்களுக்கு செல்லும் பிரயாணிகளே பெரிதும் பாதிக்கப்பட்டனர்.

யாழ்ப்பாணம், மட்டக்களப்பு, திருகோணமலை , அம்பாறை , மன்னார் ,பதுளை மற்றும்  நுவரெலியா ஆகிய தூர இடங்களுக்கான இரவு நேர பஸ் சேவைகள் இடை நிறுத்தப்பட்டிருந்தன.

வேலை நிறுத்தத்தில் ஈடுப்பட்டிருந்த ஊழியர்களின் சம்பள உயர்வு தொடர்பாக சபையின் தலைவர் உபாலி சமரசிங்க சம்பள நிர்ணைய சபையுடன் தொடர்ச்சியாக பேச்சுவார்த்தை நடத்தி வந்தார். சம்பள உயர்வு பிரச்சினைக்கு இணக்கம் காணப்பட்டது. 

இது குறித்து சபையின் தலைவர் ஊழியர்களின் தொழிற் சங்கத் தலைவருக்கு அறிவித்தார்.இதனையடுத்து வேலை நிறுத்தத்தை  கைவிட்டதாக ஸ்ரீலங்கா சுதந்திர தேசிய ஊழியர்சங்க பொதுச் செயலாளர் பந்துல அத்தநாயக்க தெரிவித்தார்.