(நா.தனுஜா)

ஈரானிடமிருந்து 2012 ஆம் ஆண்டில் பெற்றுக்கொண்ட பெற்றோலிய வளத்தின் பெறுமதியான 250 மில்லியன் அமெரிக்க டொலரை மீளச் செலுத்த வேண்டியுள்ள நிலையில், அதற்குப் பதிலாக ஈரானுக்கு தேயிலையை ஏற்றுமதி செய்து அக் கடன் தொகையை ஈடுசெய்வதற்கு அரசாங்கம் தீர்மானித்திருக்கிறது.

இதுகுறித்து விளக்கமளிக்கும் வகையில் இன்று கொழும்பிலுள்ள இலங்கை தேயிலை சபையில் விசேட ஊடகவியலாளர் சந்திப்பொன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அதில் நெடுஞ்சாலைகள், வீதி அபிவிருத்தி, பெற்றோலிய வள அபிவிருத்தி அமைச்சர் கபீர் ஹாசீம் மற்றும் பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சர் நவீன் திஸாநாயக்க ஆகியோர் கலந்துகொண்டிருந்தனர். 

இதன்போது இவ்விடயம் தொடர்பில் ஊடகங்களுக்கு விளக்கமளித்த அமைச்சர் நவீன் திஸாநாயக்க,

இத்தகையதொரு உடன்பாட்டிற்கு வருவது குறித்து ஈரானுடன் சுமார் 11 மாதகாலமாகப் பேச்சுவார்த்தை நடத்தினோம். ஈரானுடனான வர்த்தகத்திற்கு அமெரிக்கா மட்டுப்பாடுகளை விதித்ததன் பின்னர் எமது தேயிலை ஏற்றுமதிக்கான ஈரான் சந்தையும் வீழ்ச்சியடைந்தது. தற்போது அதனையும் மாற்றியமைத்துக்கொள்ள முடியும். 

இதுபற்றி அமெரிக்கத் தூதுவருக்கும் விளக்கமளித்திருக்கிறேன். தேயிலை உற்பத்தித்துறையை நம்பி சுமார் 2 மில்லியன் மக்கள் வாழ்கின்றார்கள் என்றும், அதன் சந்தை வாய்ப்பு வீழ்ச்சியினால் அவர்கள் பாதிக்கப்படுவார்கள் என்றும் எடுத்துக்கூறினேன். அதேபோன்று கடனை மீளச்செலுத்தும் நோக்கிலான இந்தப் புதிய திட்டத்தையும் தெளிவுபடுத்தினேன். அவரும் அதனை ஏற்றுக்கொண்டார். 

எனவே ஈரானுக்கு தேயிலையை ஏற்றுமதி செய்வதற்கு அமெரிக்கா எவ்வித எதிர்ப்பையும் வெளியிடாது. இன்னும் இருவாரங்களில் ஈரானிய அதிகாரிகள் குழுவொன்று இலங்கைக்கு வருகை தரவுள்ளது. அவர்களுடன் இதுபற்றி பேச்சுவார்த்தை நடத்துவோம் என்றார்.