சர்வதேச இருபதுக்கு - 20 கிரிக்கெட் அரங்கில் இந்திய அணித் தலைவர் விராட் கோலி அதிக ஓட்டங்களை குவித்த வீரர் என்ற சாதனையை படைத்துள்ளார். 

தென்னாப்பிரிக்க அணிக்கு எதிராக நேற்றைய தினம் மொஹாலியில் இடம்பெற்ற இருபதுக்கு - 20 கிரிக்கெட் போட்டியிலேயே அவர் இந்த சாதனையை பதிவுசெய்துள்ளார்.

நேற்றைய ஆட்டம் ஆரம்பமாவதற்கு முன்னர் இந்திய அணியின் துணைத் தலைவர் ரோகித் சர்மா இருபதுக்கு - 20 கிரிக்கெட் அரங்கில் மொத்தமாக 88 இன்னிங்ஸுக்களை எதிர்கொண்டு 2,422 ஓட்டத்துடன் அதிக ஓட்டங்களை குவித்த வீரர் பட்டியலில் முதல் இடத்திலிருந்தார்.

அதேநேரம் விராட் கோலி மொத்தமாக 65 இன்னிங்ஸுக்களை எதிர்கொண்டு 2,369 ஓட்டத்துடன் இரண்டாவது இடத்தில் இருந்தார்.

இந் நிலையில் நேற்றைய போட்டியில் ரோகித் சர்மாக 12 ஓட்டங்களை மாத்திரம் பெற்றார். இதனால் அவரின் ஓட்ட எண்ணிக்கை 2,434 ஆக அதிகரித்தது. மறுமுணையில் விராட் கோலி 52 பந்துகளை எதிர்கொண்டு 3 ஆறு ஓட்டம், 4 நான்கு ஓட்டம் அடங்கலாக 72 ஓட்டங்களை குவித்தார். இதனால் அவரின் ஓட்ட எண்ணிக்கை 2,441 ஆக அதிகரித்தது.

இதன் மூலம் 7 ஓட்டங்கள் வித்தியாசத்தில் விராட் கோலி ரோகித் சர்மாவை பின்னுக்குத் தள்ளி சர்வதேச இருபதுக்கு - 20 போட்டிகளில் அதிக ஓட்டங்களை குவித்த வீரர் என்ற பெருமையை பெற்றார்.

அதேநேரம் இந்த ஆண்டு அனைத்து வகையான சர்வதேச கிரிக்கெட் போட்டிகளிலும் 50 க்கும் மேற்பட்ட சராசரியை பதிவுசெய்த வீரர் என்ற பெருமையையும் அவர் பெற்றார்.

டெஸ்ட் கிரிக்கெட்டில் 53.14, ஒருநாள் கிரிக்கெட்டில் 60.31 மற்றும் இருபதுக்கு - 20 கிரிக்கெட்டில் 50.85 என்ற சராசரியையும் பதிவுசெய்துள்ளார்.

இந்த சாதனைக்கு ஐ.சி.சி.யும்., பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள்  தலைவர் ஷாகித் அப்ரீடியும் பாராட்டியும் உள்ளனர்.