சட்டவிரோதமான முறையில் ஐஸ் போதைப் பொருட்களை  இலங்கைக்கு கடத்திவர முற்பட்டபோது கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து இந்திய பிரஜை ஒருவரை சுங்க அதிகாரிகள் கைது செய்துள்ளனர். 

இந்தியா - சென்னையைச் சேர்ந்த 29 வயதான  இளைஞரே இவ்வாறான  ஐஸ் போதைப் பொருட்களை கொண்டு வந்ததாகவும் குறித்த ஐஸ் போதைப்பொருட்களை கொழும்பு உட்பட நகர புறங்களுக்கு அதிக விலையில் விற்பனை செய்யப்படுவதாக சுங்க அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 

குறித்த சந்தேகநபர் விமான நிலையத்தைவிட்டு வெளியேறும் போது அவரின் நடத்தையில் சந்தேகம் ஏற்பட்டு பயணப் பொதியை சோதனை செய்தபோது ஐஸ் போதைப்பொருட்களை சுங்க அதிகாரிகள் கைப்பற்றியுள்ளனர். 

இந்நிலையில், 864 கிராம் நிறையுடைய  ஐஸ் போதைப் பொருட்களின்  பெறுமதி சுமார் 86 இலட்சத்து 42 ஆயிரத்து 150 ரூபா  என சுங்க அதிகாரிகள் மேலும் தெரிவித்துள்ளனர். 

குறித்த சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகளை சுங்க அதிகாரிகள் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.