(ஆர்.யசி, எம்.ஆர்.எம்.வசீம்)
மலையகத் தோட்டத்தொழிலாளர்களின் ஊதியம் தொடர்பிலான பிரச்சினைகளில் அம்மக்களின் உழைப்புக்கேற்ற ஊதியம் வழங்கப்படும் வரையில் அம்மக்களது கண்ணீர் இந்த நாட்டை அரித்துக் கொண்டே இருக்கும் என்பதில் ஐயமில்லை என்று ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள் ளார்.
பாராளுமன்றத்தில் நேற்று முன்தினம் செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற ஸ்ரம வாசனா எனப்படுகின்ற உழைப்பு அதிர்ஷ்ட நிதியம், சம்பளச் சபைகள் திருத்தச் சட்டமூலம் மற்றும் தொழிற்சாலைகள் கட்டளைச் சட்டத்தின் கீழான கட்டளைகள் தொடர்பான விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் மேலும் கூறுகையில்,இந்த நாட்டின் தொழிலாளர்கள் தொடர்பில் கதைக்கின்றபோது முக்கியமாக இரு துறைகள் சார்ந்த உழைப்பாளர்கள் தொடர்பிலான பிரச்சினைகளே மிக அதிகளவில் முன்னணி வகிப்பதாகக் கூற முடியும். ஒன்று, மலையகத் தோட்டத்துறை சார்ந்த உழைப்பாளர்களது பிரச்சினைகள்.
இரண்டாவது சுதந்திர வர்த்தக வலய ஆடைத் தொழிற்சாலைகள் சார்ந்த பெண் உழைப்பாளர்களது பிரச்சினைகள். இந்த இரு துறைகளும் இன்று இந்த நாட்டின் பொருளாதாரத்தின் மிக முக்கியமான துறைகளாக விளங்குகின்றன.
மலையகத் தோட்டத்துறை தொழிலாளர்களது ஊதியப் பிரச்சினை என்பது, ஏதோ வலுக்கட்டாயமாக வழங்கப்படுகின்ற நிவாரணங்களைப் போன்று அல்லது கப்பம் செலுத்த வேண்டியிருப்பதைப் போன்று நிர்வாகத் தரப்பினரால் கையாளப்பட்டுக் கொண்டிருக்கின்றது.
உண்மையிலேயே அம் மக்கள் உங்களிடமிருந்து நிவாரணமாகவோ அல்லது கப்பமாகவோ இந்த ஊதிய உயர்வை எதிர்பார்க்கவில்லை. அவர்களது உழைப்பிற்கேற்ற ஊதியத்தையே எதிர்பார்க்கின்றனர். அதைக்கூட உயர்த்துவதற்கு வருடக் கணக்கில் பேச்சுவார்த்தைகளை நடத்திக் கொண்டு, இழுத்தடித்து வருகின்ற நிலையே இன்னமும் தொடர்கின்றது.
இந்த மக்கள் தேயிலைக் கொழுந்தில் விரல்களை வைக்காவிட்டால் இந்த நாட் டின் பொருளாதாரமே தேய்ந்துவிடும் என்பது தெரிந்தும், மிகச் சுலபமாக அம்மக்களை ஏமாற்றி வருவதற்கு, தோட்ட நிர்வாகங்களும், மறு பக்கத்தில் அம்மக்களது சந்தாப் பணங்களில் செயற்படுகின்ற சில தொழிற் சங்கங்களும் செயற்பட்டு வருவதானது மிகவும் வேதனையான விடயமாகும் என்பதை இங்கு சுட்டிக்காட்ட விரும்புகின்றேன்.
இத்தகைய நிலையில் மலையக தோட்டத் தொழிலாளர் மக்களது ஊதியத்துடன் ஐம்பது ரூபாவை அதிகரிப்பதற்கான முயற்சிகள் வாய் மூலமாகத் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. இதற்கு அமைச்சரவை அனுமதி கிடைத்தது எனவும் கூறப்பட்டது.
இந்த ஐம்பது ரூபா பற்றி பலரும் வானளவாகப் புகழ்ந்து வேதம் ஓதிக் கொண்டும் இருந்தனர். இருந்தும், இன்று வரையில் அது சாத்தியமாகவில்லை. இந்த நாட்டின் பொருளாதாரத்தின் முதுகெலும்பான இந்தத் தொழிலாள மக்களுக்கு ஒரு ஐம்பது ரூபாவையேனும் வழங்க முடியாமல், அம்மக்களைக் கட்டியெழுப்புவோம், தூக்கி நிறுத்துவோம் என வெறும் வாயால் கதைகளை அளந்து கொண்டிருப்பது வெட்கமாக இல்லையா எனக் கேட்கத் தோன்றுகின்றது.
அத்துடன், மேற்படி தொழிலாளர்களுக்கு வழங்கப்பட்டு வருகின்ற மிகவும் குறைவான நாளாந்தச் சம்பளங்களும் வெட்டப்படுகின்ற நிலையும் தொடர்கின்றன. குறிப்பாக, பணிக்குத் தாமதமாக வருதல், நாள் ஒன்றுக்குப் பறிக்கப்பட வேண்டிய கொழுந்தின் அளவு குறைந்திருத்தல் போன்ற காரணங்களை முன்வைத்து பல தோட்ட நிர்வாகங்கள் இந்தச் செயற்பாட்டை முன்னெடுத்து வருவதாகத் தெரிய வருகின்றது. இத்தகைய செயற்பாடுகள் பல காலமாக முன்னெடுக்கப்பட்டு வருகின்ற போதிலும், இலங்கையின் சில பெருந்தோட்டங்களில் தொழிலாளர்களது சம்பளமானது சட்டவிரோதமான முறையில் பல்வேறு காரணங்களை முன்னிறுத்தி வெட்டப்படுவதாக தொம்சன் ரொய்டர்ஸ் பவுண்டேஷன் அமைப்பு தகவல்களை வெளியிட்டிருந்தது.
அத்துடன், இந்தச் சம்பள வெட்டு விடயமானது இலங்கையின் கைத்தொழில் பிணக்குச் சட்டம், சம்பள நிர்ணய சபையின் கட்டளைச் சட்டம், பெருந்தோட்டத் தொழிலாளர்கள் சட்டம் உட்பட பல்வேறு தொழிலாளர் சட்டங்களை மீறுபவையாக உள்ளதாகவும் இலங்கையின் சட்டத்துறை சார்ந்த பலரும் சுட்டிக்காட்டி இருக்கின்றனர்.
இத்தகைய பல்வேறு பாதிப்புகளை தங்களது கடின உழைப்பின் முன்னால் எதிர்நோக்கி இருக்கின்ற மலையகத் தோட்டத் தொழிலாள மக்களின் ஊதியம் தொடர்பிலான பிரச்சினைகள்–அதாவது அம்மக்களது உழைப்புக்கேற்ற ஊதியம் வழங்கப்படும் வரை, தீர்க்கப்படும் வரையில் அம் மக்களது கண்ணீர் இந்த நாட்டை அரித்துக் கொண்டே இருக்கும் என்பதில் ஐயமில்லை என்றே கூற வேண்டியிருக்கின்றது.
உயர்ந்த இடங்களில் குடியமர்ந்திருந்தாலும் இம் மக்களது வாழ்க்கை நிலைமைகள் இன்னும் உயர்த்தப்படவில்லை என்பதை உணர்ந்து, அம் மக்களையும் இந்த நாட்டின் ஏனைய சமூக மக்களைப் போன்று அரசியல், சமூக, பொருளாதார ரீதியில் சமநிலைப் படுத்துவதற்கான ஏற்பாடுகள் அவசியம் என்பதையே நான் மீண்டும் மீண்டும் சுட்டிக் காட்ட விரும்புகின்றேன் என்றார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM