தென்னாப்பிரிக்க அணியை 7 விக்கெட்டுக்களினால் வீழ்த்தி, வெற்றியுடன் தொடரை ஆரம்பித்துள்ளது இந்திய கிரிக்கெட் அணி.

இந்தியாவுக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள தென்னாப்பிரிக்க கிரிக்கெட் அணி 3 போட்டிகள் கொண்ட இருபதுக்கு - 20, 3 டெஸ்ட், 3 ஒரு நாள் போட்டிகளில் பங்கேற்று வருகிறது.

அதன்படி முதலாவதாக ஆரம்பமாகியுள்ள இருபதுக்கு - 20 தொடரின் முதல் போட்டி கடந்த 15  ஆம் திகதி தர்மசாலாவில் நடைபெறவிருந்தது. எனினும் தொடர் மழை காரணமாக நாணய சுழற்சிக் கூட மேற்கொள்ளப்படாது போட்டி கைவிடப்பட்டது.

இந் நிலையில் இன்றைய தினம் இரவு 7.00 மணிக்கு மொஹாலியில் ஆரம்பமான இரண்டாவது இருபதுக்கு - 20 போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற இந்திய அணித் தலைவர் விராட் கோலி களத்தடுப்பை தேர்வுசெய்தார்.

அதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய தென்னாப்பிரிக்க அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டுக்களை இழந்து 149 ஓட்டங்களை குவித்தது.

150 ஓட்டம் என்ற வெற்றியிலக்கை நோக்கி பதிலுக்குத் துடுப்பெடுத்தாட ஆரம்பித்த இந்திய அணி 19 ஓவரில் 3 விக்கெட்டுக்களை மாததிரம் இழந்து, தென்னாப்பிரிக்க அணி நிர்ணயித்த வெற்றியிலக்கை கடந்தது.

இந்திய அணி சார்பில் ரோகித் சர்மா 12 ஓட்டத்தையும், தவான் 40 ஓட்டத்தையும், ரிஷாத் பந்த் 4 ஓட்டத்தையும் பெற்று ஆட்டமிழக்க, விராட் கோலி மொத்தமாக 52 பந்துகளை எதிர்கொண்டு 3 ஆறு ஓட்டம், 4 நான்கு ஓட்டம் அடங்கலாக 72 ஓட்டத்துடனும், ஸ்ரேயஸ் அய்யர் 16 ஓட்டத்துடனும் ஆட்டமிழக்காதிருந்தனர். 

பந்து வீச்சில் பெலக்வாயோ, ஷம்ஷி மற்றும் போர்டுயின் ஆகியோர் தலா ஒவ்வொரு விக்கெட்டுக்களை கைப்பற்றினர்.