(ஆர்.விதுஷா)

நாடளாவிய  ரீதியில் அரசாங்க மருத்தவ அதிகாரிகள் சங்கத்தினால்   முன்னெடுக்கப்பட்ட  வேலை நிறுத்தப் போராட்டத்தின்  காரணமாக  பொதுமக்கள் பாரிய அசௌகரியத்தை எதிர்நோக்கினர். 

வேலை நிறுத்தப்போராட்டத்திற்கு  ஆதரவு தெரிவித்து நாடளாவிய ரீதியில் அனைத்து வைத்தியசாலைகளின் வைத்தியர்களும் இதற்கு  ஆதரவு வழங்கியுள்ளனர்.  

இதன் காரணமாக  வைத்தியசாலைகளின் நாளாந்த  செயற்பாடுகளுக்கு பாதிப்பு  ஏற்பட்டதுடன், சிகிச்சைகளுக்காக  வருகைதந்த  நோயாளர்கள்  பாரிய அசௌகரியங்ககளுக்கு  முகங்கொடுத்துள்ளனர்.   

 

நோயாளிகளின்  தேவையை  கருத்தில்  கொண்டு அவசர சிகிச்சைப்பிரிவின் பணிகள்  தொடர்ந்தும்  இடம்பெற்ற அதேவேளை  ஏனைய நடவடிக்கைகள்  எதுவும்  இடம்பெற்றிருக்கவில்லை.   

சம்பள முரண்பாடுகளுக்கு தீர்வு காணும் வகையில் அரசாங்கத்தால் கொண்டுவரப்பட்டுள்ள  அமைச்சரவைப்பத்திரத்தில்  வைத்தியர்களையும் உள்வாங்கக்கோரியே அவர்கள் இன்று காலை 8 மணி தொடக்கம் நாளை காலை 8 மணி வரையான 24 மணி நேர அடையாள பணிப்பகிஷ்கரிப்பு போராட்டத்தினை முன்னெடுத்துள்ளனர்.

இந்த வேலை நிறுத்த பேராட்டத்தில் அரசாங்க  ஆயுர் வேத வைத்திய  அதிகாரிகள் சங்கம் மற்றும் பொது பல் சிகிச்சை சேவை  வைத்தியர்கள்  சங்கம் ஆகியன தமது ஆதரவை  தெரிவித்திருந்தனர். 

மஹரகம புற்றுநோய் வைத்தியசாலை,  முப்படையினர்  வைத்தியசாலை, சிறுவர் மற்றும் மகப்பேற்று வைத்திய சாலைகள்,  இராணுவ வைத்தியசாலை ஆகியனவற்றில் இந்த  வேலை நிறுத்த  போராட்டம்  இடம்பெற்றிருக்கவில்லை.