(ஆர்.யசி,எம்.ஆர்.எம்.வசீம்)

கொழும்பு தாமரை கோபுர விவகாரம் குறித்து முழுமையான விசாரணை ஒன்றினை நடத்தி அதன் கடன் மற்றும் கட்டுமான பணிகள் குறித்து ஆராய கோப்குழு தீர்மானம் எடுத்துள்ளது. 

இந்த நிர்மாணத்துறையுடன் தொடர்புபட்ட சகல தரப்பையும் கோப் குழு முன்னிலையில் கொண்டுவரவும் குழுவின் தலைவர் சுனில் ஹந்துன்நெத்தி தீர்மானம் எடுத்துள்ளார். 

சீனாவின் கடன் நிதியில் நீண்டகாலமாக நிருமானிக்கப்பட்ட தாமரை கோபுரம் கடந்த திங்கட்கிழமை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் திறந்து வைக்கப்பட்டது. அதன்போது இந்த நிர்மாணத்துறையில் ஏற்பட்ட களவுகள் மற்றும் கடன்கள் குறித்து ஜனாதிபதி கூறியிருந்த நிலையில் இன்று பாராளுமன்றத்தில் கூடிய கோப் குழுவில் இது குறித்து ஆராயப்பட்டது. 

இதன்போதே தாமரைக்கோபுரம் நிர்மானத்துடன் தொடர்புபட்ட சகல நிறுவனங்களையும் விசாரிக்க தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. இதில் பிரதான பங்குதாரரான இலங்கை தொலைத்தொடர்பு நிறுவனத்திருக்கும் குழு முன்னிலையில் பிரசன்னமாகி அவர்களின் தகவல்களை வழங்க கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 

ஏற்கனவே தாமரை கோபுரம் குறித்து கணக்கைவாளர் நாயகம் விசேட அறிக்கை ஒன்றினை தயாரித்ததுடன் அந்த அறிக்கை கடந்த ஏப்ரல் மாதம் முதலாம் திகதி பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. 

கணக்கைவாளர் பல கோணங்களில் விசாரணைகளை ஏற்கனவே முன்னெடுத்துள்ளார். ஆகவே அந்த அறிக்கையையும் கோப் குழு கருத்தில் கொண்டு அதன் உதவியுடன் அடுத்த கட்ட நடவடிக்கைகளை முன்னெடுப்பதாகவும் வெகு விரைவில் ஆராய்வதாகவும் அவர் குறிப்பிட்டார்.