மத்திய உள்துறை அமைச்சரும், ஆளும் பாரதிய ஜனதா கட்சியின் மூத்த தலைவருமான அமித் ஷா கடந்த சனிக்கிழமை இந்தி பற்றியும், இந்திய மொழிகள் பற்றியும் தெரிவித்த கருத்துக்கள் பெரியதொரு சர்ச்சையை மூளவைத்திருக்கின்றன.

  இந்தி தினத்தை முன்னிட்டு ஷா தெரிவித்த அந்தக் கருத்துக்களில் இந்தியா பல மொழிகளைக் கொண்ட ஒரு நாடு என்பதை ஏற்றுக்கொண்டிருக்கிறார். ஆனால் அதேவேளை இந்தியாவின் உலகளா விய அடை யாளமாக விளங்குவதற்கு ஒரு மொழி அவசியமாகும் என்றும், அது இந்தியாகவே இருக்க முடியும் என்றும் குறிப்பிட்டிருக்கின்றார். 

 


 

 தாய்மொழிப் பயன்பாட்டை ஊக்குவித்த அவர், அதேவேளை இந்தியைப் பயன்படுத்துமாறு சகல பிரஜைகளுக்கும் வேண்டுகோள் ஒன்றையும் விடுத்தார். இந்தக் கருத்துக்கள் கடுமையான கண்டனத்திற்கு உள்ளாகியிருக்கிறது. குறிப்பாகத் தென்னிந்திய மாநிலங்களிலிருந்து ஆக்ரோஷமான கண்டனங்கள் தெரிவிக்கப்பட்டிருக்கின்றன.

 

 மொழிப் பிரச்சினையைக் கையாள்வதென்பது சுதந்திர இந்தியா எதிர்நோக்கிய முதன்மையான பிரச்சினைகளில் ஒன்று. தனியொரு மொழியைத் தேசிய மொழியாக்குவதில்லை என்று அரசியல் நிர்ணய சபை தீர்மானித்தது. சமஷ்டி கட்டமைப்பு தொடர்பாகப் பேச்சுவார்த்தைகள் ஆரம்பமான போது இனத்துவ அடையாளங்களை அடிப்படையாகக் கொண்ட மாநிலங்கள் என்ற யோசனை ஜவகர்லால் நேருவிற்கு ஏற்புடையதாக இருக்கவில்லை. 

 ஆனால் மொழியை அடிப்படையாகக் கொண்ட இயக்கங்களின் வலிமையின் காரணமாக அவர் தனது மனதை மாற்றிக்கொள்ள நிர்ப்பந்திக்கப்பட்டார். மாநில உருவாக்கத்திற்கான ஒரு கோட்பாடாக மொழியை மாநிலங்கள் மீளமைப்பு குழு அங்கீகரித்தது. இந்தியைத் தனியொரு உத்தியோகபூர்வ மொழியாக்குவது தொடர்பாக 1960களில் மீண்டும் மொழிப்பிரச்சினை கிளம்பியது. தமிழ்நாடு கொந்தளித்தது. அதனால் மத்திய அரசாங்கம் பின்வாங்க வேண்டியேற்பட்டது. இறுதியாக இந்தியா 'இங்னு ஆங்கிலம், இந்தி மற்றும் பிராந்திய மொழி" என்ற மும்மொழி கோட்பாட்டிற்கு வந்தது.

தற்போது நடைமுறையிலிருக்கும் மொழி ஏற்பாடுகளை அப்படியே விட்டுவிடுவது நல்லது. ஐக்கியப் பட்ட, துடிப்பான ஒரு ஜனநாயகம் என்ற வகையில் இந்தியாவின் வெற்றி மொழிப் பல்வகைமைக்கு வழங்கும் அங்கீகாரத்திலிருந்தே கிடைக்கப்பெற்றது. மாறாகக் கிழக்கு பாக்கிஸ்தானில் வங்காள மொழி பேசும் பிரஜைகள் மீது உருதுமொழியைத் திணிப்பதற்குப் பாக்கிஸ்தான் மேற்கொண்ட முயற்சியே பங்களாதேஷ் என்ற புதிய நாடு உருவாகுவதற்கு வழிவகுத்தது.