(ஆர்.யசி,எம்.ஆர்.எம்.வசீம்)

ஜனாதிபதி - பிரதமரின் வெளிநாட்டு விஜயங்கள், அந்த விஜயங்களின் நோக்கங்கள் தொடர்பிலும் பதிலளிக்க ஒருவருட கால அவகாசம் கேட்டதால் இன்று சபையில் கடும் அதிருப்தி  தெரிவிக்கப்பட்டது.

பாராளுமன்றத்தில் இன்று வாய்மூல விடைக்கான வினா நேரம் இடம்பெற்றது.  

இதில் ஜே .வி.பி.எம்.பி.யான நளிந்த ஜெயதிஸ்ஸ 2015-01-09 முதல் 2018-06-30 வரை பிரதமர்  மேற்கொண்ட வெளிநாட்டு விஜயங்கள் ,அந்த விஜயங்களின் நோக்கங்கள்.அதில் பங்கேற்றவர்கள் .அதற்காக செலவிடப்பட்ட தொகை தொடர்பில் பிரதமரும் தேசிய கொள்கைகள்,பொருளாதார அலுவல்கள்,மீள்குடியேற்றம்,புனர்வாழ்வு வடக்கு மாகாண அபிவிருத்தி மற்றும் இளைஞர்கள் அலுவல்கள் அமைச்சரான  ரணில் விக்கிரமசிங்கவிடம் கேள்வி எழுப்பினார்.

ஆனால் பிரதமர் சபையில் இருக்காததால் அரசதரப்பு பிரதம கொறடாவும் அமைச்சருமான கயந்த கருணாதிலக்க .இக்கேள்விக்கு பதிலளிக்க பிரதமர் 6 மாத கால அவகாசம் கோருவதாகக் கூறினார். இதனைத்தொடர்ந்து ஒழுங்குப்பிரச்சினை எழுப்பிய ஜே .வி.பி.எம்.பி.யான நளிந்த ஜெயதிஸ்ஸ ,பாராளுமன்ற நிலையியற் கட்டளையின் பிரகாரம் உறுப்பினர் ஒருவரின் கேள்விக்கு சம்பந்தப்பட்ட அமைச்சர் பதிலளிக்க 3 தடவைகளுக்கு மேல் கால அவகாசம்  கேட்க முடியாது.  ஆனால் இக்கேள்விக்கு பதிலளிக்க முதல் தடவை மூன்று  மாத கால அவகாசம் கேட்கப்பட்டது. பின்னர் இரண்டாவது தடவையும் மூன்று  மாத கால அவகாசம் கேட்கப்பட்டது. இப்போது மூன்றாவது தடவை  ஆறு மாத கால அவகாசம் கேட்கப்படுகின்றது.

இது ஒரு சாதாரண கேள்வி. இந்த கேள்விக்கான பதில்கள் வெளிவிவகார அமைச்சிடமும் பிரதமர் அலுவலகத்திடமும் கண்டிப்பாக இருக்கும். ஆனால் இதற்கு பதிலளிக்க அரசாங்கம்  ஒருவருட கால அவகாசம் கேட்டுள்ளது. எந்த வகையில் நியாயம் எனக்கேட்டார். உறுப்பினரின் கேள்வி நியாயமானது என ஒப்புக்கொண்ட சபைசபாநாயகர் கருஜெயசூரிய  முதல்வரும் அமைச்சருமான லக்ஷ்மன் கிரியெல்ல விடம்  ,கேள்விகளுக்கு முடிந்த வரையில் உடனடியாக பதில்களைப்பெற்றுக்கொடுப்பதே சிறந்தது என்றார்.