தளபதி விஜய் நடிப்பில் தயாராகி இருக்கும் ‘பிகில்’ படத்தின் வெளியீடு எப்போது என்பது குறித்து, படம் தணிக்கை செய்யப்பட்ட பிறகுதான் உறுதிப்படுத்தப்படும் என்று படத் தயாரிப்பு நிறுவனம் விளக்கமளித்துள்ளது.

இயக்குநர் அட்லீ இயக்கத்தில், தளபதி விஜய் நடிப்பில் தயாராகியிருக்கும் திரைப்படம் ‘பிகில்’. இதில் தளபதி விஜயுடன் நயன்தாரா, கதிர், ஜேக்கி ஷராஃப், டேனியல் பாலாஜி, விவேக், யோகி பாபு, ஆனந்தராஜ், ரெபா மோனிகா ஜோன், இந்துஜா உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். தந்தையாகவும், மகனாகவும் இரட்டை வேடத்தில் தளபதி விஜய் நடித்திருக்கும் இந்த படத்திற்கு, கே.ஜி.விஷ்ணு ஒளிப்பதிவு செய்ய, இசைப்புயல் ஏ. ஆர் .ரகுமான் இசை அமைத்திருக்கிறார். இந்த படத்தின் இசை வெளியீடு நாளை நடைபெறுகிறது. இதற்காகத் தயாரிப்பு நிறுவனம் பிகில் படத்தின் புதிய சுவரொட்டியை வெளியிட்டு, ரசிகர்களை உற்சாகப்படுத்தியிருக்கிறது.

உதைப்பந்தாட்ட விளையாட்டு வீரராகவும், அதனைக் கற்பிக்கும் பயிற்சியாளராகவும் தளபதி விஜய் நடித்திருக்கும் இந்த படத்தை ஏ.ஜி.எஸ். என்டர்டெயின்மென்ட் என்ற நிறுவனம் சார்பில் அர்ச்சனா கல்பாத்தி, கல்பாத்தி அகோரம் ஆகியோர் தயாரித்திருக்கிறார்கள்.

இந்தப் படம் தீபாவளியன்று வெளியாகும் என அறிவிக்கப்பட்டது. ஆனால் தீபாவளி பண்டிகை 27 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை என்பதால், வசூல் கருதி ‘பிகில்’ படத்தை ஒக்டோபர் 24ஆம் திகதியன்று வெளியாகும் என்று படமாளிகை அதிபர்கள் தரப்பில் தயாரிப்பாளருக்கு கோரிக்கை வைக்கப்பட்டது. ஆனால் தயாரிப்பு நிறுவனம் சார்பில் ‘பிகில்’ திரைப்படம் தீபாவளி அன்று தான் வெளியாகும் என செய்திகள் வெளியானது. இதனால் படம் எந்த திகதியில் வெளியாகும் என்பதில் குழப்பம் ஏற்பட்டது.

இதற்கு விளக்கம் அளித்துள்ள பட தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி, ‘‘பிகில் திரைப்படத்தின் வெளியீட்டு திகதி, படம் தணிக்கை செய்யப்பட்ட பிறகுதான் உறுதிப்படுத்தப்படும். அதுவரை வெளியீடு குறித்து தவறான தகவல்களை வெளியிட வேண்டாம்” என்று கேட்டுக் கொண்டிருக்கிறார்.