(நா.தனுஜா)

இலங்கையில் பெண்கள் சமாதான மற்றும் பாதுகாப்பு நிகழ்ச்சித்திட்டத்தை நடைமுறைப்படுத்தி பெண்களை வலுவூட்டுவதற்காக ஜப்பான் அரசாங்கம் 2 மில்லியன் அமெரிக்க டொலர் நிதியுதவியை வழங்கியிருக்கிறது. 

இதன்பிரகாரம் போரின் காரணமாகவும், ஏனைய சில காரணிகளாலும் பாதிக்கப்பட்ட பெண்களை வலுவூட்டுவதற்கான பயிற்சிகளை வழங்குதல் மற்றும் பால்நிலை சமத்துவத்தை மேம்படுத்துதல் என்பவற்றுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படவுள்ளது. 

அதற்கமைய முதற்கட்டமாக சுமார் 600 பெண்களும், 100 இளம் யுவதிகளும் அடையாளம் காணப்பட்டள்ளனர். அதேபோன்று அம்பாறை, வவுனியா, மொனராகலை மாவட்டங்களில் பெண்களுக்கான பயிற்சி நிலையங்கள் அமைக்கபடவுள்ளதுடன், போரினால் பாதிக்கப்பட்ட வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களைச் சேர்ந்த பெண்கள் தொடர்பிலும் விசேட அவதானம் செலுத்தப்பட்டுள்ளது. 

இந்த வலுவூட்டல் திட்டம் ஆசிய மற்றும் பசுபிக் பிராந்தியத்திற்கான ஐக்கிய நாடுகள் பெண்கள் அமைப்பினால் இலங்கையில் நடைமுறைப்படுத்தப்படவுள்ள நிலையில், அதன் பிராந்தியப் பணிப்பாளர் மொஹமட் நஸ்றி மற்றும் இலங்கைக்கான ஜப்பானிய தூதுவர் அகிரா சுகியாமா ஆகியோருக்கிடையில் இருதரப்பு ஒப்பந்தம் கைச்சாத்திடும் நிகழ்வு இன்று புதன்கிழமை கொழும்பிலுள்ள ஜப்பானிய தூதுவரின் இல்லத்தில் நடைபெற்றமையும் குறிப்பிடத்தக்கதாகும்.