சன் நாளிதழ் தனது குடும்பம் பல வருடங்களிற்கு முன்னர் எதிர்கொண்ட துயரத்தை செய்தியாக  வெளியிட்டுள்ளதை இதயமற்ற ஒழுக்ககேடான செயல் என பென்ஸ்டோக்ஸ் கண்டித்துள்ளார்.

இங்கிலாந்தின் சன் செய்தித்தாளில் இங்கிலாந்தின் சகலதுறைவீரரும் 2019 ஆசஸ் கதாநாயகனுமான பென்ஸ்டோக்சின் இதுவரை மறைக்கப்பட்ட குடும்பம் ரகசியம் வெளியாகியுள்ளது. 

பென்ஸ்டோக்சின் தாயின் முதல் கணவரிற்கு பிறந்த இரு பிள்ளைகள் அவரது தாயின் முன்னாள் கணவனாலேயே  சுட்டுக்கொல்லப்பட்டனர் என தெரிவித்துள்ள சன் பென்ஸ்டோக்ஸ் பிறப்பதற்கு முன்னர் இது இடம்பெற்றது என தெரிவி;த்துள்ளது.

இதனையே பென்ஸ்டோக்ஸ் கண்டித்துள்ளார்.

31 வருடங்களிற்கு முன்னர் எனது குடும்பத்தில் இடம்பெற்ற தனிப்பட்ட சம்பவங்கள் குறித்து சன் செய்தி வெளியிட்டுள்ளதாகவும் இது குறித்து ஆழ்ந்த கவலையடைந்துள்ளதாகவும் பென்ஸ்டோக்ஸ் குறிப்பிட்டுள்ளார்.

சன் நாளிதழின் செய்தியில் பல பிழைகள் உள்ளன இதனால் நாங்கள் மேலும் பாதிக்கப்பட்டுள்ளோம் என பென்ஸ்டோக்ஸ் குறிப்பிட்டுள்ளார்.

சன் இந்த செய்தியை பிரசுரிப்பதற்கு தீர்மானித்துள்ளதால் எனது தாய்; மிகமோசமான வாழ்நாள் முழுவதும் நீடிக்க கூடிய பாதிப்பை எதிர்கொண்டுள்ளார் என பென்ஸ்டோக்ஸ் தெரிவித்துள்ளார்.

எனது பெயரை ஒரு வாய்ப்பாக பயன்படுத்தி எனது பெற்றோரின் அந்தரங்க வாழ்க்கையை கிளறியிருப்பது முற்றிலும் அருவருப்பானது என பென்ஸ்டோக்ஸ் குறிப்பிட்டுள்ளார்.

இதழியல் என்ற போர்வையில் இடம்பெற்றுள்ள இந்த கீழ்த்தரமான  கண்டிக்கதக்க நடவடிக்கையை  வர்ணிப்பதற்கு வார்த்தைகள் இல்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

எனது பொதுவாழ்க்கை எனக்கு பாதிப்புகளை கொண்டுவரும் என்பதை நான் அறிந்திருந்தேன் என குறிப்பிட்டுள்ள பென்ஸ்டோக்ஸ் அதனை நான் ஏற்றுக்கொள்கின்றேன் ஆனால் எனது பொதுவாழ்க்கையை காரணமாக வைத்து எனது பெற்றோரினதும் மனைவி பிள்ளைகளினதும்  தனிப்பட்ட வாழ்க்கைக்குள் நுழைவதற்கு நான் அனுமதிக்கமாட்டேன் எனவும் பென்ஸ்டோக்ஸ் குறிப்பிட்டுள்ளார்.

அவர்களிற்கு அவர்களது தனிப்பட்ட வாழ்க்கைகான உரிமையுள்ளது எனவும் பென்ஸ்டோக்ஸ் குறிப்பிட்டுள்ளார்.

மூன்று தசாப்தங்களாக எனது குடும்பம் இந்த தனிப்பட்ட துயரத்தினை எதிர்கொள்வதற்கு கடுமையாக போராடியுள்ளது,தனிப்பட்ட அதிர்ச்சி தரும் சம்பவங்களை அந்தரங்கமாக வைத்திருப்பதற்கு முயன்றுள்ளது எனவும் பென்ஸ்டோக்ஸ் குறிப்பிட்டுள்ளார்.