பாராளுமன்ற அமர்வுகளில் அமைச்சர்களும் ஆளும்கட்சி உறுப்பினர்களும் தவறாது பங்குபற்றவேண்டும். இந்தக் கடமையிலிருந்து தவறுவோருக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டிவரும் என்று பிரதமர் ரணில் விக்கிரமசிங்க எச்சரிக்கை விடுத்துள்ளார்.

ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற குழுக்கூட்டம் நேற்று கட்சியின் தலைமையகமான சிறிகோத்தாவில் இடம்பெற்றது. இதன்போது 11 அமைச்சக்களுக்கு 55 மில்லியன் ரூபா நிதி ஒதுக்குவது தொடர்பான குறைநிரப்பு பிரேரணை மீதான வாக்கெடுப்பின்போது ஏற்பட்ட சர்ச்சை தொடர்பில் ஆராயப்பட்டது. இந்த வாக்கெடுப்பின்போது பெருமளவு ஆளும்கட்சி அமைச்சர்கள், எம்.பி.க்கள் சபையில் இருக்காமை தொடர்பில் உறுப்பினர்களிடம் விளக்கம் கோரப்பட்டது.

இதன்போதே, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க பாராளுமன்ற அமர்வுகளின்போது அனைத்து ஆளும் கட்சி உறுப்பினர்களும் சபையில் பிரசன்னமாகியிருக்கவேண்டும். பிரசன்னமாகாது வெறும் சாக்குபோக்குகளை கூறினால் கடும் நடவடிக்கை எடுக்கவேண்டி வரும். குறைநிரப்பு பிரேரணை தோற்கடிக்கப்பட்டிருந்தால் அரசாங்கத்துக்கு பெரும் அபகீர்த்தி ஏற்பட்டிருக்கும். எனவே இந்த விடயத்தில் ஆளும் கட்சி உறுப்பினர்கள் அவதானம் செலுத்தவேண்டும் என்றும் பிரதமர் சுட்டிக்காட்டியுள்ளார்.

கட்சியின் பாராளுமன்றக் குழுக் கூட்டத்தையடுத்து, அமைச்சரவை அமைச்சர்களையும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க சந்தித்து கலந்துரையாடியுள்ளார். இதன்போதும் குறைநிரப்பு பிரேரணை விவகாரம் தொடர்பில் கலந்துரையாடப்பட்டுள்ளது.