(நெவில் அன்தனி)


கல்வி அமைச்சின் ஏற்பாட்டில் குருநாகல் வெலகெதர விளையாட்டரங்கில் இம்மாதம் 20, 21, 22ஆம் திகதிகளில் நடத்தப்படவிருந்த  அகில இலங்கை பாடசாலைகள் தொடர் ஓட்ட விழா (ரிலே கார்னிவல்) கொழும்பு சுகதாச விளையாட்டரங்குக்கு இடம் மாற்றப்பட்டுள்ளது.

குருநாகலில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக அகில இலங்கை பாடசாலைகள் தொடர் ஓட்ட விழாவைக் கொழும்பு சுகததாச அரங்கில் இம்மாதம் 20, 21, 22ஆம் திகதிகளில் நடத்தத் தீர்மானித்ததாகக் கல்வி அமைச்சின் விளையாட்டுத்துறை உதவிப் பணிப்பாளர் றுவன் பத்திரண தெரிவித்தார்.

தொடர் ஓட்ட விழாவில் பங்குபற்ற விண்ணப்பித்திருக்கும் பாடசாலைகளின் பொறுப்பாசிரியர்கள் தமது வீரர்களைக் கொழும்பு 14, கிராண்ட்பாஸ் புனித ஜோசப் ஆண்கள் பாடசாலைக்கும், வீராங்கனைகளைப் புனித ஜோசப் பெண்கள் பாடசாலைக்கும் நாளை வியாழக்கிழமை பிற்பகல் 4.00 மணிக்கு முன்னர் அழைத்துவருமாறு கோரப்பட்டுள்ளனர்.

 அங்கிருந்து மாணவர்களும் மாணவிகளும் கல்வி அமைச்சு அதிகாரிகளால் உரியப் பாடசாலைகளுக்கு அழைத்துச் செல்லப்பட்டுத் தங்கவைக்கப்படுவர்.


 

தொடர் ஓட்ட விழாவில் மத்தியஸ்தம் வகிக்க நியமிக்கப்பட்டுள்ள அனைவரும் கொழும்பு சுகததாச ஹோட்டலுக்கு நாளை (19ஆம் திகதி) பிற்பகல் 3.00 மணிக்கு முன்னர் வருகை தருமாறு கோரப்பட்டுள்ளனர்.

இவ் வருடப் போட்டிகளில் 350க்கும் மேற்பட்ட ஆண்கள் மற்றும் பெண்கள் பாடசாலைகளைச் சேர்ந்த 10,000க்கும் மேற்பட்ட வீர, வீராங்கனைகள் பங்குபற்றுவர் என எதிர்பார்க்கப்படுகின்றது. 

 12, 14, 16, 18, 20 ஆகிய வயதுகளுக்குட்பட்ட இருபாலாருக்கும் தொடர் ஓட்டப் போட்டிகள் நடத்தப்படவுள்ளன.

மேலதிக விபரங்களுக்கு கல்வி அமைச்சின் விளையாட்டுத்துறை உதவிப் பணிப்பாளர் ருவன் பத்திரவை 071 8470905 என்ற தொலைப்பேசி இலக்கத்தில் தொடர்புகொள்ளவும்.