(ஆர்,யசி,எம்.ஆர்.எம்.வஸீம்)

பெருந்தோட்டக் கம்பனிகளின் அடாவடித்தன நிர்வாக முறைமையின் கீழ் பெருந்தோட்டங்கள் சின்னாபின்னமாகி வருகின்றன.

இதுதொடர்பாக தொழில் ஆணையாளர் கவனம் செலுத்தவேண்டும் என ராஜாங்க அமைச்சர் வடிவேல் சுரேஷ் தெரிவித்தார். 

பாராளுமன்றத்தில் ஸர்ம வாசனா நிதியத் திருத்தச் சட்டமூலம் மீதான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்.

அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில்,

ஸர்ம வாசனா நிதியத்திருத்தச் சட்டமூலம் பெருந்தோட்டத் தொழிலளார்களைப் பாதுகாப்பதற்காக கொண்டுவரப்பட்டுள்ளதாகவே காண்கின்றேன்.

 தொழிலாளர்களின் வழக்குகள் தொடர்பில் இதுவரை காலமும் கம்பனிகாரர்களே நன்மையடைந்து வந்தனர். 

இதன் பின்னர் தொழிலாளர்கள் அதன் வரப்பிரசாதங்களை அடைந்துகொள்வார்கள். அத்துடன் தொழிற்சங்கங்களுக்கும் இந்த சட்டமூலம் பெரும் சக்தியாகும். 

மேலும் 22 பெருந்தோட்ட கம்பனிகளாலே பெருந்தோட்ட தொழிலாளர்கள் நிர்வகிக்கப்பட்டு வருகின்றனர். அவர்கள் ஒப்பந்தத்தை மீறியும் மனித உரிமையை மீறியும் தொழிலாளர்களை வஞ்சித்து வருகின்றனர். 

இதுதொடர்பாக தொழில் ஆணையாளர் மற்றும் பிரதேசங்களில் இருக்கும் பிரதி ஆணையாளர்கள் கவனம்செலுத்தவேண்டும். 

அத்துடன் 22 பெருந்தோட்டக் கம்பனிகளின் அடாவடித்தன நிர்வாக முறைமையின் கீழ் பெருந்தோட்டங்கள் சின்னாபின்னமாகி வருகின்றன.¸ இது தொடர்பில் பெருந்தோட்டத்துறை அமைச்சும் பெருந்தோட்ட கம்பனிகளும் இணைந்து இதுதொடர்பில் நடவடிக்கை எடுக்கவேண்டும். இல்லாவிட்டால் இன்னும் 10 வருடங்களில் பெருந்தோட்டங்கள் இல்லாமலாகிபோகும் அபாயம் இருக்கின்றது என்றார்.