(எம்.மனோசித்ரா)

ஐக்கிய தேசிய கட்சியின் செயற்குழுவை கூட்டுவதற்கான தினம் குறித்து இது வரையில் தீர்மானிக்கப்படவில்லை என்று தெரிவித்த அந்த கட்சியின் பொதுச் செயலாளர் அகிலவிராஜ் காரியவசம், ஜனாதிபதித் தேர்தல் குறித்து உத்தியோகபூர்வ அறிவிப்பு விடுக்கப்பட்டவுடன் அல்லது அதன் பின்னரே செயற்குழு கூடும் என்றும் தெரிவித்தார்.

தேர்தல்கள் ஆணைகுழுவின் தலைவருடன் இன்று இடம்பெற்ற சந்திப்பின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். 

அவர் மேலும் தெரிவிக்கையில், 

நான் கட்சியின் பொதுச்  செயலாளராக இருந்தாலும் என்னால் எடுக்கப்படும் தீர்மானங்கள் கட்சி யாப்பிற்கு இணங்க , செயற்குழுவில் ஆலோசனைக்கு அமையவே எடுக்கப்படும். 

ஐக்கிய தேசிய கட்சியின் செயற்குழு அடுத்த வாரம் கூடவுள்ளதாக ஊடகங்களில் வெளியாகியுள்ள செய்திகள் உண்மையற்றவை. கட்சி செயலாளர் என்ற வகையில் கட்சி செயலாளரின் ஆலோசனைக்கு அமைய செயற்குழுவை கூட்டும் அதிகாரம் என்னிடம் காணப்படுகிறது. செயற்குழுவை கூட்டுவதற்கான தினம் இது வரையில் தீர்மானிக்கப்படவில்லை. 

ஜனாதிபதித் தேர்தல் தொடர்பில் இது வரையில் உத்தியோகபூர்வமாக எந்த அறிவிப்பும் விடுக்கப்படவில்லை. இது தொடர்பில் அறிவிக்கப்பட்டவுடன் அல்லது அதன் பின்னரே செயற்குழு கூட்டப்படும். 

அதன் போது வேட்பாளர் குறித்த பிரச்சினைக்கு தீர்வு காணப்படும். தற்போது ஏனைய கட்சிகளுடனும் பேச்சுவார்த்தைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. இவ்வாறு அனைத்து தரப்பினருடனும் பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்டு அதன் பின்னரே தீர்மானங்களை எடுக்கக் கூடியதாக இருக்கும் என அவர் தெரிவித்தார்.