(செ.தேன்மொழி)

தெமட்டகொடை தொடர் மாடி குடியிருப்பில் திடீர் தீப்பரவல் ஏற்பட்டுள்ளது. இதன்போது யாரும் பாதிக்கப்படாத நிலையில் குறித்த வீடு முழுமையாக தீக்கிரையாகியுள்ளது.

தீப்பரவலுக்கான காரணம் இன்னும் கண்டறியப்படாத நிலையில் விசாரணைகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டு வருவதாக பொலிஸார் தெரிவித்தனர்.

தெமட்டகொடை - ஆராமய வீதியில் அமைந்துள்ள தொடர்மாடி கட்டடத்தில் ஐந்தாம் மாடியிலேயே இன்று பிற்பகல் 3 மணியளவில் இந்த தீ விபத்து இடம்பெற்றுள்ளது.

இதனால் குறித்த பகுதியில் பெரும் பதற்ற நிலைமை ஏற்பட்டிருந்ததுடன், தெமட்டகொடை பொலிஸார் பிரதேசவாசிகள் மற்றும் கொழும்பு மாநகர சபையின் தீயணைப்பு படையுடன் இணைந்து தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்துள்ளனர்.

சம்பவத்தில் எந்தவித உயிர் தேசங்களும் ஏற்படிருக்கவில்லை. குறித்த கட்டிடத்தின் ஐந்தாம் மாடி முழுவதும் தீக்கிரையாகியிருந்ததுடன், அங்கிருந்த  சொத்துகளுக்கு பாரிய சேதங்கள் ஏற்பட்டுள்ளதாக பொலிசார் மேலும் தெரிவித்தனர்.