(எம்.எப்.எம்.பஸீர்)

பாதாள உலகத் தலைவனான கஞ்சிபானை இம்ரானை குரல் பரிசோதனைக்கு உட்படுத்த தேவையான குரல் மாதிரியைப் பெறும் பொருட்டு அவரை அரச இரசாயன பகுப்பாய்வு திணைக்களத்தில் ஆஜர் செய்ய கொழும்பு பிரதான நீதிவான் நீதிமன்றம் இன்று உத்தரவிட்டது. 

வாழைத்தோட்டம் பொலிஸ் நிலையத்தின் வலய சுற்றிவளைப்புப் பிரிவு பொறுப்பதிகாரியை தொலைபேசியில் தொடர்புகொண்டு மரண அச்சுறுத்தல் விடுத்தமை தொடர்பிலான  விசாரணைகளுக்காக இவ்வாறு அவரை குரல் பரிசோதனைக்கு உட்படுத்த கொழும்பு பிரதான நீதிவான் லங்கா ஜயரத்ன விசாரணைகளை முன்னெடுக்கும் சி.சி.டி. எனப்படும் கொழும்பு குற்றத்தடுப்புப் பிரிவுக்கு அனுமதியளித்தார்.  

அதன்படி நாளைமறுதினம் 19 ஆம் திகதி காலை 10.00 மணிக்கு அரச இரசாயன பகுப்பாய்வு திணைக்களத்தில் குரல் சோதனைக்காக ஆஜர் செய்யப்பட வேண்டும் எனவும், அதனால் அது குறித்து நீதிமன்ற உத்தரவொன்றினை வழங்குமாறும் சி.சி.டி.யினர் கோரினர். 

அதற்கு அனுமதியளித்த நீதிவான், குறித்த தினம், குறித்த  நேரத்தில் கஞ்சிபானை இம்ரானை பத்தரமுல்லையில் உள்ள அரச இரசாயன பகுப்பயவு திணைக்களத்தில் ஆஜர்செய்ய சிறைச்சாலை அத்தியட்சருக்கு உத்தரவிட்டார்.