ஆப்கானிஸ்தானில் ஜனாதிபதி உரையாற்றவிருந்த தேர்தல் பிரச்சார கூட்டத்தில் இடம்பெற்ற குண்டு வெடிப்பில் 25ற்கும் அதிகமானவர்கள் கொல்லப்பட்டுள்ளனர்.

ஆப்கானின் பர்வான் மாகாணத்தின் தலைநகரான சரிகரில் ஜனாதிபதி அஸ்ரவ் கானி உரையாற்றவிருந்த பிரச்சார கூட்டத்தை இலக்குவைத்து தீவிரவாதிகள் தாக்குதலை மேற்கொண்டுள்ளனர் என மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

பொதுமக்களே அதிகளவில் கொல்லப்பட்டுள்ளனர், பெண்களும் குழந்தைகளும் அதிகளவில் பலியாகியுள்ளனர் என  மாகாணத்தின் பிரதான மருத்துவமனையின் அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார்.

அம்புலன்ஸ்களை ஈடுபடுத்தியுள்ளோம் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கலாம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

தற்கொலை குண்டுதாக்குதலே இடம்பெற்றுள்ளது என அரச அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதிக்கு எந்த பாதிப்புமில்லை எனவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

ஜனாதிபதி உரையாற்ற ஆரம்பித்தவேளையே தாக்குதல் இடம்பெற்றுள்ளது எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.