( ஆ.பிரபுராவ் ) 

மத்திய வங்க கடலில் மையம் கொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு நிலை வடக்கில் இருந்து தெற்கு நோக்கி நகர்ந்து காரைக்காலுக்கும் நாகபட்டிணத்திற்கும் இடையே கரையை கடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

சென்னை வானிலை மைய உத்தரவின் பேரில் நேற்று மாலை முதல்  பாம்பன் துறைமுகத்தில்  முன்றாம் நிலை புயல் குண்டு ஏற்றப்பட்டுள்ளது.  

புயல் எச்சரிக்கையால் மீனவர்கள் எவரும் கடலுக்கு மீன்பிடிக்கச் செல்லக்கூடாது என அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர் .

மேலும் பாம்பன் கடல் பகுதியில் கடந்த சில நாட்களாக வழக்கத்துக்கு மாறாக பலத்த காற்றுடன் மழை பெய்து வருகிறது.  கரையோர குடிசைகளுக்குள் கடல்நீர் புகுந்துள்ளதால் அச்சத்துடன் தாம் வாழ்ந்து வருவதாக மீனவர்கள் தெரிவித்துள்ளனர்.

தங்கச்சிமடம், மாந்தோப்பு கடற்கரையில் நிறுத்திவைக்கப்பட்டிருந்த படகொன்று முற்றிலும் சேதமடைந்து பெரும் நஷ்டம் ஏற்பட்டுள்ளது.

மேலும் கடல் சீற்றத்தால் மீன்வரத்து இன்றி மிகவும்  நஷ்டம் ஏற்பட்டுள்ளதாகவும்  மீனவர்கள் தெரிவித்துள்ளனர்.  ஆபத்துக் காலங்களில் துறைமுகத்தில் ஏற்றப்படும் புயல் எச்சரிக்கை குண்டு குறித்து அதிகாரிகள் எந்தவொரு அறிவிப்போ எச்சரிக்கையோ கொடுப்பதில்லை. எனவே  வருங்காலங்களில் முறையாக மீனவசங்கங்களுக்கு அறிவிப்பு கொடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் மீனவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பலத்தகாற்றால் நேற்று முதல் பாம்பன் ரயில்பாலத்தில் ரயில்கள் வழக்கத்துக்கு மாறாக குறைந்த வேகத்தில் இயக்கப்பட்டு வருகிறது. கடந்த மூன்று நாட்களாக நாட்டுப்படகு மீனவர்கள் மீன்பிடிக்கச் செல்லாததால் பல இலட்சம் ரூபா வர்த்தகம் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் மீன்பிடி தொழில் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் கவலை தெரிவித்துள்ளனர்.