(இரா­ஜ­துரை ஹஷான்)

பொது­ஜன பெர­மு­னவின் சின்­னத்தில் மாற்­றத்தை ஏற்­ப­டுத்­து­வது தொடர்பில் சுதந்­திர கட்­சி­யுடன் பேச்­சு­வார்த்­தை­களை முன்­னெ­டு க்க வேண்­டிய தேவை ஏதும் கிடை­யாது.

 ஜனா­தி­பதி தேர்­தலில் போட்­டி­யிடும் வேட்­பாளர், கொள்­கைத்­திட்­டங்­க­ளுக்கே முக்­கி­யத்­துவம் கொடுக்­கப்­படும் என  பொது­ஜன பெர­மு­னவின் தவி­சாளர் பேரா­சி­ரியர் ஜி. எல். பீரிஸ்  தெரி­வித்தார். 

சுதந்­திர கட்சி கூட்­ட­ணியின் ஊடாக இணைந்­ததன் பின்னர் பொதுத்­தேர்­தலின் போது நிச்­சயம் சின்னம் குறித்து கவ­னம்­செ­லுத்­தப்­படும். அதில் எவ்­வித மாற்­றுக்­க­ருத்­துக்­களும் கிடை­யாது எனவும்  அவர் குறிப்­பிட்டார். 

பொது­ஜன பெர­மு­னவின் தலைமை காரி­யா­ல­யத்தில் நேற்று திங்­கட்­கி­ழமை இடம் பெற்ற ஊட­க­வி­ய­லாளர் சந்­திப்பில் கலந்துக் கொண்டு கருத்­து­ரைக்­கை­யி­லேயே   அவர் மேற்­கண்­ட­வாறு குறிப்­பிட்டார்.   

அவர் மேலும் குறிப்­பி­டு­கையில், ஸ்ரீ லங்கா சுதந்­திர கட்­சிக்கும், பொது­ஜன பெர­மு­ன­விற்கும் இடை­யி­லான பரந்து பட்ட கூட்­டணி அமைத்தல் விவ­காரம் வெற்றிப் பெறும் தரு­வாயில் காணப்­ப­டு­கின்­றது.  பொது­ஜன பெர­மு­னவின் மொட்டு சின்­னத்தில் மாற்­றத்­தினை ஏற்­ப­டுத்த வேண்டும் என்று சுதந்­திர கட்­சியின் பொதுச்­செ­ய­லாளர் தயா­சிறி ஜய­சே­கர தெரி­வித்­துள்­ளமை கவ­னித்­தக்­கது.

நாட்டு மக்கள் உட்­பட அர­சி­யல்­வா­தி­களின் கவனம் அனைத்தும் தற்­போது ஜனா­தி­பதி தேர்­தலை இலக்­காகக் கொண்­டுள்­ளது என்­பதை சுதந்­திர கட்­சியின் பொதுச்­செ­ய­லாளர் புரிந்துக் கொள்ள வேண்டும். ஜனா­தி­பதி தேர்­தலில் தற்­போது சின்னம் குறித்து கவனம் செலுத்த வேண்­டிய கட்­டாயம் ஏதும் கிடை­யாது. ஜனா­தி­பதி வேட்­பாளர் யார், முன்­வைக்­கப்­படும் கொள்­கைத்­திட்­டங்­கள்­ஆ­கி­ய­வற்­றுக்கே முக்­கி­யத்­துவம் செலுத்­தப்­படும். இவ்­வி­ரண்டும் தற்­போது  பொது­ஜன பெர­மு­ன­வினால் முழு­மைப்­ப­டுத்­தப்­பட்­டுள்­ளது.

சுதந்­திர கட்சி  பொது­ஜன பெர­மு­ன­வுடன் கூட்­ட­ணியில் இணைந்­த­வுடன்  இடம் பெற­வுள்ள  பொதுத்­தேர்­தலின் போது  மொட்டு சின்­னத்தில் மாற்றம் ஏற்­ப­டுத்­தப்­பட வேண்டும் என்று கோரிக்கை விடுத்தால் நிச்­சயம்   அக்­கோ­ரிக்கை பர­சீ­லனை செய்­யப்­படும். பொதுத்­தேர்­தலில் சின்­னங்­களில் மாற்றம் ஏற்­ப­டுத்­து­வது சாதா­ரண விட­ய­மாகும்.ஆகவே இந்த விட­யத்தில் எவ்­வித மாற்று கருத்தும் கிடை­யாது.

ஜனா­தி­பதி தேர்­த­லுக்­கான வேட்பு மனுத்­தாக்கல் இன்னும் 10 நாட்­க­ளுக்குள் அறி­விக்­கப்­படும் என்று எதிர்­பார்க்­கப்­ப­டு­கின்­றது.அர­சியல் களத்தில்  பொது­ஜன பெர­மு­னவின் ஜனா­தி­பதி வேட்­பாளர் கோத்­தா­பய ராஜ­ப­க்ஷவை எதிர்க்க முடி­யா­த­வர்கள்  முறை­யற்ற விதத்தில் புதிய குற்­றச்­சாட்­டுக்­களை தற்போது முன்வைக்க ஆரம்பித்து விட்டார்கள். கடந்த நான்கு வருட காலமாக  சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுக்கள் ஏதும் இதுவரையில் நிரூபிக்கப்படவில்லை. ஆகவே நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுக்கல் ஒருபோதும் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவதற்கு தடையாகாது என்றார்.