தமிழ்நாடு பிரீமியர் லீக் போட்டிகளில் ஆட்டநிர்ணய சதி இடம்பெற்றதாகவும் முன்னாள் இந்திய அணி வீரர் விபி சந்திரசேகர் மறைவிற்கு இதுவும் காரணமாகயிருக்கலாம் எனவும் வெளியாகியுள்ள தகவல்களால் இந்திய கிரிக்கெட்டில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

தமிழ்நாடு பிரீமியர் லீக்கில் விளையாடும் அணியொன்றை ஆட்டநிர்ணயசதிக்கும்பல் தனது கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவந்ததை தொடர்ந்தே விபி சந்திரசேகர் தற்கொலை செய்துகொண்டார் என தகவல்கள் வெளியாகியுள்ளன.

விபி சந்திரசேகரின் நெருங்கிய நண்பர்களையும் தமிழ்நாடு மாநில கிரிக்கெட் வீரர்களைம் சந்திரசேகரின் மரணம் தொடர்பில் விசாரணை செய்தவேளையே காவல்துறையினருக்கு  ஆட்டநிர்ணய சதி குறித்த தகவல் தெரியவந்துள்ளது.

இவர்களிற்கு இந்த தற்கொலையுடன் நெருங்கிய தொடர்பில்லாத போதிலும் நாங்கள் சில முக்கியமான தகவல்களை பெற்றுள்ளோம் என காவல்துறை அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார்.

ஆட்டநிர்ணய சதி குறித்து தமிழ்நாடு கிரிக்கெட் சங்கத்திற்கு பல இரகசிய கடிதங்கள் கிடைத்தன ,இதனை தொடர்ந்தே இந்திய கிரிக்கட் கட்டுப்பாட்டுச்சபையின் ஊழல் தடுப்பு பிரிவினர் விசாரணைகளை மேற்கொண்டனர் எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

வட்ஸ் அப் குழுவில் சில பெயர்கள் காணப்படுகின்றன அது குறித்து விசாரணை செய்கி;ன்றோம் இதுவரை தமிழ்நாடு பிரீமியர் லீக்கின் எந்த வீரரையோ அல்லது உரிமையாளரையோ விசாரணை செய்யவில்லை என இந்திய கிரிக்கட் கட்டுப்பாட்டுச்சபையின் ஊழல் தடுப்பு பிரிவினர் தெரிவித்துள்ளனர்.

சிலவீரர்களை ஆட்டநிர்ணய சதிக்கும்பலை சேர்ந்தவர்கள் அணுகியுள்ளனர் வீரர்கள் இது குறித்து எங்களிற்கு தெரியப்படுத்தியுள்ளனர் எனவும் குறிப்பிட்டுள்ள இந்திய கிரிக்கட் கட்டுப்பாட்டுச்சபையின் ஊழல் தடுப்பு பிரிவினர் நாங்கள் யார் வீரர்களை அணுகியுள்ளனர் என்பது குறித்து விசாரணைகளை மேற்கொண்டுள்ளோம் எனவும் இந்திய கிரிக்கட் கட்டுப்பாட்டுச்சபையின் ஊழல் தடுப்பு பிரிவினர் குறிப்பிட்டுள்ளனர்.

தமிழ்நாடு பிரீமியர் லீக் போட்டிகள் அனேகமாக திண்டுக்கல் மற்றும் திருநெல்வேலியில் இடம்பெறுவதால் கண்காணிப்பு குறைவாக உள்ளது இதனால் ஆட்டநிர்ணய சதிக்காரர்கள் வீரர்களை அணுகமுடிகின்றது எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

வெளியாட்கள் வீரர்களின் ஓய்வறைக்குள் நுழைவது சகஜமான விடயமாக காணப்பட்டது. சென்னையில் இது இடம்பெறுவதற்கு சாத்தியமில்லை என தமிழ்நாடு பிரீமியர் லீக் போட்டிகளை நன்கு அவதானித்தவர்கள்  சுட்டிக்காட்டியுள்ளனர்.