(நா.தினுஷா)
நாட்டின் முக்கியமான பாடசாலைகளில் நடைமுறைப்படுத்தப்படும் 'ஸ்மார்ட்' வகுப்பறைகளை அமைக்கும் திட்டம் வரும் காலத்தில் சகல பாடசாலைகளுக்கும் வழங்கப்படும் என்று கொழும்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹூமான் தெரிவித்தார்.

கொழும்பு மட்டக்குளி சேர் ராஷிக் பரீத் முஸ்லிம் பெண்கள் கல்லூரிக்கான உயிரியல் தொழில்நுட்ப கட்டிடத்தொகுதியை கையளிக்கும் நிகழ்வு இன்று நடைபெற்றது. இந் நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இதனை குறிப்பிட்டார்.
எதிர்காலத்தில் கல்வித் துறை நவீன தொழிநுட்பத்துடன் ஒன்றிணைந்து பயணிக்க வேண்டிய நிலை உருவாகியுள்ளது. இந்த அரசாங்கம் ஆட்சிக்கு வந்து இந்த நான்கரை வருடங்களில் கல்வித்துறையில் பாரிய மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. பாடசாலைகளுக்கு என்று நாடுபூராகவும் பாரிய கட்டிடங்களும் நிர்மாணித்து கொடுக்கப்பட்டுள்ளன.
அருகிலுள்ள பாடசாலை சிறந்த பாடசாலை வேலைத்திட்டத்தின் கீழ் அண்மையில் 500 பாடசாலைகளுக்கான புதிய கட்டிடத்தொகுதிகளும் மாணவர்களின் பாவனைக்கு கையளிக்கப்பட்டது. இதற்கு மேலதிகமாக பாடசாலைகளில் காணப்படும் தொழில் நுட்ப குறைபாடுகள், அடிப்படை வசதிகள் என்பவற்றை நிவர்த்தி செய்து கொடுப்பதற்காக அரசாங்கத்தால் பாரியளவான நிதி செலவு செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.